×

2026 சட்டமன்ற தேர்தலில் தவெக vs திமுக இடையே தான் போட்டி- டிடிவி தினகரன்

 

வரக்கூடிய தேர்தலில் ஆளும் திமுக கூட்டணிக்கும் தவெக தலைமையில் அமைகின்ற கூட்டணிக்கும் இடையே தான் போட்டியிருக்கும் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

புதுக்கோட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், “தவெக புதிய கட்சி விஜய் உட்பட அங்கிருக்க கூடிய நிர்வாகிகள் அனைவரும் புதியவர்கள், அங்கு ஆலோசனை சொல்ல யாரும் இல்லை. வருகின்ற தேர்தலில் எடப்பாடி பழனிச்சாமி 15 சதவீதத்திற்கும் கீழ் வாக்கு சதவீதத்தை பெறுவார். 2006 இல் விஜயகாந்த் ஏற்படுத்திய தாக்கத்தை விட 2026 இல் அதிகத் தாக்கத்தை விஜய் ஏற்படுத்துவார். இரண்டாவது இடத்திற்கு விஜய் வருவதற்கான வாய்ப்பு உள்ளது. எடப்பாடி பழனிச்சாமி தலைமையில அணி தானாக மூன்றாவது இடத்திற்கு சென்று விடும். திரை உலகில் எத்தனையோ சவால்களை சந்தித்தவர் விஜய். எடப்பாடி பழனிச்சாமியை பற்றி அவருக்கு தெரியாதா? துரோகத்திற்கு பெயர் பெற்றவர் எடப்பாடி பழனிச்சாமி. ஆகவே விஜய் தலைமையிலான கூட்டணியில் பழனிச்சாமியை சேர்ப்பதற்கு விஜய் யோசிப்பார். பழனிச்சாமி எப்பொழுதும் அம்மாவாசை வேலையைத்தான் செய்வார். எந்த கூட்டணியும் உடையும் என்று நான் ஜோதிடம் கூறவில்லை, நீங்கள் எதிர்பாராத விதமாக கணிக்க முடியாத அளவிற்கு புதிய கூட்டணிகள் உருவாகும். வரக்கூடிய தேர்தலில் ஆளும் திமுக கூட்டணிக்கும் தவெக தலைமையில் அமைகின்ற கூட்டணிக்கும் இடையே தான் போட்டியிருக்கும். 

தவெக கட்சித் தொண்டர்கள் விஜயை முதலமைச்சராக ஆக்குவதற்கு தான் விரும்புவார்களே தவிர துரோகத்திற்கே பெயர் போன பழனிச்சாமியை ஆதரித்து அவர் தலைமையின் கீழ் விஜய் செல்வதால் தேர்தல் முடிவதற்குள் சாப்பிட்டு கை காயுவதற்குள் துரோகம் செய்வதைப்போல இவரை ஆட்சியில் அமர்த்தியவர்கள் ஆட்சி தொடர காரணமாக இருந்தவர்கள் நான்கு அரை ஆண்டு ஆட்சியை காப்பாற்றியவர்கள் இவர்களுக்கெல்லாம் துரோகம் செய்த பழனிச்சாமி விஜய்க்கு துரோகம் செய்வார் என்பது விஜய்க்கு தெரியாதா? அவர் என்ன சிறு பிள்ளையா? உறுதியாக விஜய் பழனிச்சாமியின் தலைமையை ஏற்று கூட்டணிக்கு செல்ல வாய்ப்பில்லை. பழனிச்சாமி தான் தன்னால் இந்த தேர்தலில் வெற்றி பெற முடியாது என்று உணர்ந்து விஜய் தலைமையை ஏற்று கூட்டணி செல்வதற்கு வேண்டுமென்றால் வாய்ப்பு இருக்கிறது. எடப்பாடி பழனிச்சாமி அவரது கட்சியினரையே வைத்து தவெக கட்சிக் கொடியை பிடிக்க சொன்னவர். பழனிச்சாமிக்கு விஜய் கூட்டணிக்கு வரப்போவதில்லை என்று தெரியும். அதிமுக நிர்வாகிகளும் தொண்டர்களும் சோர்ந்து போய் உள்ளதால் அவர்கள் கட்சியை சேர்ந்தவர்களே விஜய் கட்சி கொடியை பிடித்த போது கூட்டணிக்கு பிள்ளையார் சுழி போட்டு விட்டதாக பேசினார். அதற்கும் விஜய் பதில் சொல்லிவிட்டால் அதுவும் முடிந்துவிடும். கரூர் வழக்கில் நான் நடுநிலையாக பேசி வருகிறேன் அதிமுகவினர் தான் வக்கீல் வாதாடுவதைப் போல தவெக-விற்காக பேசுகின்றனர், எடப்பாடி பழனிச்சாமி தவெகவிடம் தூங்குகிறார்” எனக் கூறினார்.