திருமாவளவன் குழம்பி போய் இருக்கிறார்...மனது ஏதோ நினைக்கிறது... வாய் ஏதோ பேசுகிறது - அண்ணாமலை விமர்சனம்..!
பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை மதுரை வந்தார். அப்போது விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், ''காஞ்சிபுரத்தில் தயாரிக்கப்பட்ட மருந்தில், ''டை எத்தலின் க்ளைகால்'' என்ற ரசாயனம் தான் விஷத்தன்மையை உருவாக்கியுள்ளது.
இந்த நிறுவனம் 300க்கும் மேற்பட்ட விதிமீறல்களை செய்துள்ளது. இதை கண்காணிக்க வேண்டிய டிரக் இன்ஸ்பெக்டர் யாரும் அந்த மருந்து நிறுவனத்திற்கு நேரடியாக சென்று பரிசோதனை செய்யவில்லை. 23 குழந்தைகள் இறந்த பிறகு சிறப்பு புலனாய்வு குழு வந்த பிறகு, அந்த அதிகாரிகளை கைது செய்யக்கூடாது என்பதற்காக தமிழக அரசு அவர்களை சஸ்பெண்ட் செய்துள்ளது. இதில் தமிழக அரசுக்கு முழு பொறுப்பு உள்ளது. முதல்வர் இது குறித்து பேச வேண்டும். உப்புக்கு சப்பாணியாக இரண்டு ட்ரக் இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட் செய்வது ஏற்க முடியாது.
கரூர் துயரத்தை எப்படி பேசுகிறோமோ? அதே போல 23 குழந்தைகள் இறந்ததை ஏன் பேச மறுக்கிறோம்? தமிழகத்தை பொறுத்தவரை வேறொரு மாநிலத்தில் குழந்தைகள் இறந்ததால் தப்பித்துக் கொள்ளலாம் என்று நினைக்கிறார்கள். இதுவே நமது ஊரில் நடந்திருந்தால் நாம் சும்மா இருப்போமா?
சென்னையில் திருமாவளவன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நீதியரசர் மீது நடைபெற்ற தாக்குதல் தொடர்பாக அதை கண்டித்து நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் இவர்கள் ஒரு வழக்கறிஞரை தாக்கி இருக்கிறார்கள். அதுதான் காமெடி. மேலும், இதுகுறித்து திருமாவளவன் மேடையில் பேசும் போது, '' வழக்கறிஞர் எங்களை பார்த்து முறைத்ததால் ஒரு தட்டு தட்டினோம்'' என்று பேசுகிறார். திருமாவளவன் மற்றும் அவரிடம் இருப்பவர்கள் பாகிஸ்தானுக்கு செல்ல வேண்டும். ஏனென்றால் பாகிஸ்தான் காரர்கள் தான் முறைத்துக் கொண்டு இருக்கிறார்கள். அப்போது அவர்களை வேண்டுமென்றால் இரண்டு தட்டு தட்டட்டும். முறைத்தவர்களை எல்லாம் தட்ட வேண்டும் என்று நினைத்தால் தமிழகத்தில் திருமாவளவனுக்கு இடம் இல்லை. தலைவர் முன்னுதாரணமாக நடந்திருக்க வேண்டும், கீழே இறங்கி தடுத்திருக்க வேண்டும்.
விஜய் அரசியலுக்கு வந்த பிறகு திருமாவளவன் எண்ண ஓட்டத்தில் ஏதோ பிரச்சினை உள்ளது. குழம்பிப் போய் இருக்கிறார். மனது ஏதோ நினைக்கிறது, வாய் ஏதோ பேசுகிறது .உடம்பு ஏதோ நினைக்கிறது, கை ஏதோ நினைக்கிறது. திருமாவளவன் தியானம் செய்துவிட்டு அரசியல் பாதையை தேர்ந்தெடுக்க வேண்டும்.
எனது எக்ஸ் தளத்தில் யார் வேண்டுமானாலும் கமெண்ட் பண்ணலாம். ஆனால், திருமாவளவன் எக்ஸ் தளத்தில் யாரும் கமெண்ட் செய்ய கூடாது என்பதற்காக அதனை டிசேபிள் செய்துள்ளார். இப்படிப்பட்டவர்கள் பாஜகவை பார்த்து கருத்து சுதந்திரம் பற்றி பேசுகிறார்கள். இதை ஒரு வெட்கக்கேடாக பார்க்கிறேன்.