×

தமிழ் சமூகம் எக்கேடு கெட்டாலும் பரவாயில்லை என்ற எண்ணத்தில் நடத்தும் பிக்பாஸ் நிகழ்ச்சியை தடை செய்ய வேண்டும் - தவாக வேல்முருகன்..!

 

தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவரும், எம்எல்ஏவுமான வேல்முருகன் சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழர்களின் கலாச்சாரம், பண்பாடு, ஒழுக்க நெறிமுறைகள், மாணவ, மாணவிகளை பிக்பாஸ் என்ற நிகழ்ச்சி சீரழித்து வருகிறது. இந்த நிகழ்ச்சியை தமிழ் சமூகம் எக்கேடு கெட்டாலும் பரவாயில்லை என்ற எண்ணத்தில் நடத்துகின்றனர். அண்மையில் ஒளிபரப்பிய காட்சிகள் எல்லாம் குடும்பத்தினரோடும், தாய், தந்தையிரோடும், குழந்தைகளோடு பார்க்க முடியாத அருவருக்கத்தக்க வகையில் இருந்தன.

அதில், படுக்கை அறை காட்சிகளும், ஆணும், பெண்ணும் முத்தமிடும் காட்சிகளும் இடம் பெற்றுள்ளன. அதில், உடலுறவு காட்சியை மட்டும் தான் அவர்கள் ஒளிபரப்பவில்லை. இவ்வளவு கேவலமான, அநாகரிகமான நிகழ்ச்சியை விஜய் தொலைக்காட்சி நடத்தி தான் பணம் சம்பாதிக்க வேண்டுமா என்ற கேள்வி எனது மனதில் எழுகிறது. இது தொடர்பாக அறிக்கைகளும் வெளியிட்டுள்ளேன். மேலும், சட்டமன்றத்தில் கவன ஈர்ப்பு தீர்மானமும் பேரவை தலைவர் அப்பாவுவிடம் அளித்துள்ளேன்.

கடந்த 2 நாள்களுக்கு முன்பு தமிழக அரசுக்கும், முதல்வர் மு. க. ஸ்டாலினுக்கும் உடனடியாக பிக் பாஸ் நிகழ்ச்சியை தடை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி இருக்கிறேன். ஆனால், 2 நாள்களாகியும், அறிக்கை வெளியிட்டும் தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுத்ததாக தெரியவில்லை. எனவே, நான் அளித்திருக்கின்ற கவன ஈர்ப்பு தீர்மானத்தை எடுத்துக் கொண்டு பேரவை தலைவர் அனுமதித்து தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலினும், செய்தி ஒளிபரப்பு துறையும், தகவல் தொழில்நுட்பத் துறையும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு தடை விதிக்க வேண்டும்.

இல்லையெனில், அனைத்து தாய்மார்களையும் திரட்டி பிக்பாஸ் திரையரங்கத்திலும், விஜய் டிவி நிறுவனம் முன்னும் மாபெரும் போராட்டத்தை தமிழக வாழ்வுரிமை கட்சி முன்னெடுக்கும். பிக் பாஸ் நிகழ்ச்சி வீடியோவில் உள்ள கமெண்டில் இந்த நிகழ்ச்சி தமிழகத்துக்கு மோசமான நிகழ்ச்சி என்று பலர் கருத்து தெரிவித்துள்ளனர். எனது போராட்டத்திற்கு தமிழக மக்கள் ஆதரவு அளிக்க வேண்டும். கர்நாடகாவில் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு தடை விதித்தது போல தமிழகத்திலும் தடை விதிக்க வேண்டும். ஆந்திர மாநிலம் மற்றும் கேரள மாநிலத்திலும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு மாற்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேற்கண்ட மாநிலங்களில் உள்ள அரசு நிர்வாகம் மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து உள்ளது. தமிழகத்தில் பொதுமக்கள் ஜாதி, மதம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளாக பிரிந்து கிடக்கின்றனர். இதனால், தமிழகத்தில் கல்லா கட்டலாம் என்ற நோக்கில் பிக் பாஸ் நிகழ்ச்சியை ஒளிபரப்பி வருகின்றனர். எனவே, தமிழக அரசு சிறிதும் தாமதிக்காமல் பிக் பாஸ் நிகழ்ச்சியை தடை செய்வதற்கு விரைந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தார்.