×

சின்னத்திரை நடிகர் ரோபோ சங்கர் மறைவு: தமிழக அரசியல் தலைவர்கள் இரங்கல்!

 

பிரபல காமெடி நடிகர் ரோபோ சங்கர் உடல் நலக் குறைவால் நேற்று இரவு  (செப்டம்பர் 18) சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் காலமானார். அவருக்கு வயது 46.கோடிக்கணக்கான மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்திய கலைஞன் மிக இள வயதிலேயே தன் வாழ்க்கை பயணத்தை முடித்துக் கொண்டது அவரது குடும்பத்தினருக்கும், ரசிகர்களுக்கும் மிகப் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ரோபோ சங்கர் மறைவு குறித்து பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அரசியல் தலைவர்கள் தங்கள் துக்கத்தை பகிர்ந்து கொண்டுள்ளனர்.

மு.க.ஸ்டாலின் - தமிழ்நாடு முதலமைச்சர்

திரைக்கலைஞர் திரு. ரோபோ சங்கர் அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து வருத்தமுற்றேன். மேடைகளில் துவங்கி, சின்னத்திரை - வண்ணத்திரை என விரிந்து, தமிழ்நாட்டு மக்களை மகிழ்வித்தவர் திரு. ரோபோ சங்கர். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும் - கலையுலகினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

செல்வப் பெருந்தகை - தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர்

தமிழ் திரையுலகில் தனித்துவமான நகைச்சுவை நடிப்பால் மக்களின் இதயத்தில் நிலைத்து நின்ற நடிகர் திரு.ரோபோ சங்கர் அவர்களின் மறைவு செய்தி அறிந்து மிகுந்த வருத்தமுற்றேன். தனது இயல்பான கலை வெளிப்பாட்டாலும், எளிமையான வாழ்வியலாலும், அவர் மக்களின் அன்பை பெற்றுச் சென்றார்.

மக்களை மகிழ்விக்கும் நகைச்சுவை நடிகர் விவேக் அவர்களை தொடர்ந்து, தற்போது நடிகர் ரோபோ சங்கர் அவர்களது இழப்பு பேரதிர்ச்சி அளிக்கிறது. கலை துறையில் உள்ள அனைவரும் தங்களது உடல் நலத்தை பேணி காத்திட வேண்டுமென வேண்டுகோள் விடுக்கிறேன். திரு.ரோபோ சங்கர் அவர்களின் இழப்பு திரையுலகிற்கும், அவரை நேசித்த கோடிக்கணக்கான ரசிகர்களுக்கும் ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும். அவரது இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்.

நயினார் நாகேந்திரன் - பாஜக மாநிலத் தலைவர்

நடிகர் திரு. ரோபோ சங்கர் மறைவுச் செய்தி கேட்டு அதிர்ச்சி அடைந்தேன். தன்னுடைய நகைச்சுவை திறனால், பல்லாயிரக்கணக்கான ரசிகர்களை கவலையில் இருந்து மீட்டவர். இவரது மறைவு, திரையுலகிற்கு மட்டுமின்றி ரசிகர்களுக்கும் பேரிழப்பாகும்! அவரைப் பிரிந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கும், திரையுலகினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன். ஓம் சாந்தி!

தமிழிசை சௌந்தர்ராஜன் - முன்னாள் ஆளுநர்

சின்னத்திரை முதல் வெள்ளித்திரை வரை பிரபலமாக விளங்கிய திரைப்படக் கலைஞர் திரு. ரோபோ சங்கர் அவர்களின் மறைவு மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. திரைப்படத்துறையினருக்கும், அவரது குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்கிறேன். மேலும், திரைப்படக் கலைஞர்கள் தங்கள் கடுமையான பணிகளுக்கிடையில் உடல் நலத்தையும் பேணிப் பாதுகாக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்.
 

கமல்ஹாசன் - மநீம தலைவர்

ரோபோ சங்கர் ரோபோ புனைப்பெயர் தான் என் அகராதியில் நீ மனிதன் ஆதலால் என் தம்பி போதலால் மட்டும் எனை விட்டு நீங்கி விடுவாயா நீ? உன் வேலை நீ போனாய் என் வேலை தங்கிவிட்டேன். நாளையை எமக்கென நீ விட்டுச் சென்றதால் நாளை நமதே.