×

சோலி முடிஞ்சுது! யூடியூபர் திவ்யா உள்ளிட்ட 3 பேர் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்ய மறுப்பு

 

யூடியூபர்கள்  திவ்யா, கார்த்திக் மற்றும் சித்ரா ஆகியோரை குண்டர் சட்டத்தில்  கைது செய்ததை இரத்து செய்ய கோரிய மனுவை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.

ஈரோட்டை சேர்ந்தவர் யூடியூபர்  கார்த்திக். தஞ்சாவூரைச் சேர்ந்த மற்றொரு யூடியூபர் திவ்யாவுடன் சேர்ந்து ரீல்ஸ் வெளியிடுவதற்காக, கடந்தாண்டு ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதிக்கு சென்றனர்.  அங்கு திவ்யா, சிறுவர்களுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக கார்த்திக் புகார் அளித்தார். இதேபோல்  திவ்யா, குழந்தைகளை வீட்டில் அடைத்து பாலியல் தொல்லை கொடுப்பதாக மற்றொரு யூடியூபர் கடலூர் சித்ராவும் கூறியிருந்தார். இதுகுறித்து விசாரித்த திருவில்லிபுத்தூர் அனைத்து மகளிர் போலீசார்  யூடியூபர்கள் திவ்யா, கார்த்திக், சித்ரா மற்றும் திவ்யாவிற்கு உதவிய ஆனந்தராமன் ஆகிய 4 பேர் மீது போக்சோவில்  கைது செய்தனர். பின்னர் திவ்யா, கார்த்திக் மற்றும் சித்ரா ஆகியோரை குண்டர் சட்டத்தில்  கைது செய்தனர்.

இதை எதிர்த்து திவ்யா, கார்த்திக்கின் சகோதரி பாக்யலட்சுமி, சித்ராவின் கணவர் பிரசன்ன வெங்கடேஷ் ஆகியோர் ஐகோர்ட் மதுரை கிளையில் மனு செய்தனர்.இந்த மனுவை நீதிபதிகள் கார்த்திகேயன், விஜயகுமார் ஆகியோர் விசாரித்தனர். அரசு கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் திருவடிக்குமார் ஆஜராகி, ‘‘பாதிக்கப்பட்டவர்கள் 18 வயதிற்குட்பட்டவர்கள் என்பதை 3 பேர் ஒப்புக் கொண்டு வாக்குமூலம் அளித்துள்ளனர். இதற்குத் தேவையான ஆவண, ஆதாரங்கள் உள்ளன”  என்றார்.

இதை கேட்ட நீதிபதிகள்,  இந்த வழக்கை பொறுத்தவரை அரசு தரப்பு ஆவண, ஆதாரங்கள் போதுமானவையே. ரிமாண்ட் உத்தரவில் நீதிபதி தனது கைப்பட எழுதியதை தங்களால் சரியாக புரிந்து கொள்ள முடியவில்லை என மனுதாரர்கள் தரப்பு கூறினாலும், குண்டர் சட்டம் குறித்து சம்பந்தப்பட்டோரிடம் விளக்கப்பட்டதை அவர்கள் புரிந்துள்ளனர். இதில் நடைமுறைகள் முறையாக பின்பற்றப்பட்டுள்ளது. எனவே, மனுதாரர் தரப்பு வாதங்கள் ஏற்புடையதல்ல. இது எங்களுக்கு திருப்தியை தருகிறது. எனவே, இந்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்படுகின்றன என  உத்தரவிட்டுள்ளனர்.