×

“சென்னையில் எவ்வளவு மழை வந்தாலும் எதிர்கொள்ள தயார்”- மு.க.ஸ்டாலின்

 

சென்னை பொறுத்தவரை கடந்த மூன்று மாதமாகவே முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து வருகிறோம்.  எவ்வளவு மழை வந்தாலும் எதிர்கொள்ள தயாராக உள்ளோம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

தென் மாவட்டங்களில் பல்வேறு பகுதிகளில் கன மழை பெய்து வரக்கூடிய நிலையில், சென்னை எழிலகத்தில் அமைந்துள்ள மாநில அவசர கால செயல்பாட்டு மையத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து கோயம்புத்தூர், நீலகிரி, திருவாரூர், தேனி, ராமநாதபுரம், விருதுநகர், திருநெல்வேலி, உள்ளிட்ட மாவட்ட ஆட்சியர்களுடனும், சென்னை மாநகராட்சி அதிகாரிகளுடனும் முதலமைச்சர் ஆலோசனை மேற்கொண்டார்.

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “தேனி, தென்காசி, ராமநாதபுரம், கோயம்புத்தூர், நீலகிரி மாவட்ட ஆட்சியர் உடன் ஆலோசனை மேற்கொண்டேன். இதுவரை எந்த ஒரு அபயகரமான சூழ்நிலையும் அங்கு ஏற்படவில்லை. 21ஆம் தேதி புயல் வரக்கூடிய வாய்ப்பு உள்ளது என்பதனால் அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துள்ளோம். கடலோரம் மற்றும் ஆற்றங்கரை ஓரம் இருப்பவர்களை அப்புறப்படுத்த அறிவுரை வழங்கி உள்ளோம். டெல்டா மாவட்டங்களில் பயிர்கள் சேதம் அடைந்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் மட்டுமே சொல்லி வருகிறார், அது தவறான செய்தி. டெல்டா மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை பணிகளை ஏற்கனவே செய்துள்ளோம். சென்னை பொறுத்தவரை கடந்த மூன்று மாதமாகவே முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து வருகிறோம்.  எவ்வளவு மழை வந்தாலும் எதிர்கொள்ள தயாராக உள்ளோம்” என்றார்.