×

“ஆம்னி பேருந்துகள் நாளைக்குள் அதிக கட்டணத்தை குறைக்காவிட்டால் கடும் நடவடிக்கை"- அமைச்சர் எச்சரிக்கை

 

அதிக கட்டணம் அறிவித்த தனியார் ஆம்னி பேருந்துகள், நாளைக்குள் அதிக கட்டணத்தை குறைக்காவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அரியலூர் மாவட்டம் திருமானூரையடுத்த புங்கங்குடி ஊராட்சியில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களின் கோரிக்கையை ஏற்று, அரியலூர் - சுண்டக்குடி வழித்தடத்தில் இயங்கி வந்த பேருந்தை பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் பயன்பெறும் வகையில் ஆதனூர் வரை புதிய வழித்தடத்தில் நீட்டிப்பு செய்து, அந்த பேருந்து இயக்கத்தினை போக்குவரத்து மற்றும் மின்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் இன்று கொடியசைத்து துவங்கி வைத்தார். 

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சிவசங்கர், “கடந்தாண்டு தனியார் ஆம்னி பேருந்து உரிமையாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி அரசு சார்பில் கட்டண விகிதத்தை அறிவித்தோம். கடந்த தீபாவளி மற்றும் பொங்கல் பண்டிகையின் போது மக்கள் எந்த பிரச்சினையுமின்றி பயணம் செய்தனர். இந்தாண்டு தீபாவளி பண்டிகை முன்பதிவில் 10-க்கும் மேற்பட்ட தனியார் ஆம்னி பேருந்துகள், அதிக கட்டணம் விகிதத்தை வெளியிட்டுள்ளதாக தகவல் வந்துள்ளது. அந்த ஆம்னி பேருந்து நிறுவனங்கள் நாளைக்குள் கட்டணைத்தை குறைக்காவிட்டால், அந்த பேருந்துகள் மீது தீபாவளிக்கு முன்பாகவே கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், ஆம்னி பேருந்து உரிமையாளர்களை அழைத்துப் பேச போக்குவரத்துத் துறை ஆணையர் மற்றும் காவல்துறையுடன் இணைந்து ஆலோசனை கூட்டம் திட்டமிடப் பட்டுள்ளதாகவும் நடத்தப்படும்” என்றார்.