கொலை நகரமாக மாறிய ‘கோவை’- 6 நாட்களில் 4 பேர் அடுத்தடுத்து கொலை
கோவையில் கடந்த ஆறு நாட்களில் இரண்டு சிறார்கள் உட்பட நான்கு பேர் அடுத்தடுத்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
14 வயது சிறுவன் கொலை
கோவை இருகூர் பகுதியைச் சேர்ந்த பேரூராட்சியில் தூய்மைப் பணியாளர் பாரதிராஜாவின் மூத்த மகன் திவிஸ் (13), கடந்த 15-ஆம் தேதி மாலை முதல் திடீரென காணாமல் போயுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர், சிறுவனைப் பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் சிங்காநல்லூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த சிங்காநல்லூர் போலீஸார், சிறுவன் திவிஸின் நண்பர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில், திவிஸ் அடித்துக் கொலை செய்யப்பட்ட அதிர்ச்சித் தகவல் வெளிவந்தது.
இதனையடுத்து, இருகூர் ரயில்வே சிறிய மேடை அருகே மறைவான ஒரு பகுதியில் வீசப்பட்டிருந்த திவிஸின் உடலை போலீஸார் மீட்டனர். இந்த வழக்கு தொடர்பாக தினசின் நண்பர்களான 13 மற்றும் 15 வயது சிறுவர்கள் இருவரை போலீசார் கைது செய்தனர். விசாரணையில் சிறுவர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் திவிஸை இரண்டு பேரும் சேர்ந்து கல் மற்றும் கீழே கிடந்த மது பாட்டிலால் அடித்து கொலை செய்தது தெரியவந்தது. பின்னர் கைது செய்யப்பட்ட இரு சிறுவர்களையும் கூர்நோக்கு இல்லத்திற்கு அனுப்பி வைத்தனர்.
கொலை செய்யப்பட்ட தொழிலாளி
கோவையில் 14 வயதில் சிறுவன் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவத்தின் அதிர்ச்சி நீங்குவதற்குள், சூலூர் அருகே ஆச்சான் குளத்தின் கரையில் முகம் சிதைக்கப்பட்ட நிலையில் நிர்வாணமாக ஆண் சடலம் கிடப்பதாக நீலாம்பூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார் அடையாளம் தெரியாத இளைஞரின் உடலை நீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். விசாரணையில், உயிரிழந்தவர் அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தைச் சேர்ந்த சரவணன் (41) என்பது தெரியவந்தது. இவர் ஏ.ஜி.புதூர் பகுதியில் உள்ள 'லைஃப் கன்டெய்னர் சிலிண்டர்' என்ற தனியார் நிறுவனத்தில் கூலித் தொழிலாளியாக வேலை பார்த்துக்கொண்டு, அங்கேயே தங்கியிருந்தார். கொலை செய்யப்பட்ட சரவணன், உடன் பணியாற்றும் கோகுல் மற்றும் அவர்களது சக தொழிலாளியான ஹரிஷ் ஆகிய மூவரும் ஏ.ஜி.புதூர் தனியார் நிறுவனத்தில் ஒன்றாக வேலை பார்த்து வந்துள்ளனர். சம்பவத்தன்று இரவு மூவரும் ஆச்சான்குளம் பகுதிக்குச் சென்று ஒன்றாக மது அருந்தியுள்ளனர். அப்போது அவர்களுக்குள் திடீரென வாக்குவாதம் ஏற்பட்டு, தகராறாக மாறியுள்ளது. இதில் ஆத்திரமடைந்த கோகுலும், ஹரிஷும் சேர்ந்து சரவணனை கற்களால் சரமாரியாகத் தாக்கி, நிர்வாணப்படுத்திவிட்டு அங்கிருந்து தப்பியோடியது தெரியவந்தது. இதில் கோகுல் காவல் நிலையத்தில் சரணடைந்த நிலையில், தலைமறைவான ஹரீஸை போலீசார் கைது செய்தனர். மது போதையில் ஏற்பட்ட தகராறு சரவணன் முகம் சிதைக்கப்பட்டு கொலை செய்யப்பட்டதோடு, நிர்வாண படுத்தியதும் கோவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொடூர கொலை
அடுத்தடுத்த கொலைகள் நடைபெற்ற நிலையில், கோவை சூலூர் அருகே வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த 10 வயது சிறுமி மாயமானதாக பெற்றோர் காவல்துறை அவசர எண்ணான 100க்கு அழைத்து தகவல் கொடுத்துள்ளனர். இது குறித்து தகவலறிந்து வந்த சூலூர் போலீசார் மாயமான சிறுமியை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். இரவு முழுவதும் சிறுமி தேடப்பட்ட நிலையில் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. 250 சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்த போலீசார் சிறுமியை அதே பகுதியை சேர்ந்த கார்த்திக் (33) என்பவர் இருசக்கர வாகனத்தில் அழைத்துச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து கார்த்திக்கை மடக்கி பிடித்த போலீசார் அவருடன் இருசக்கர வாகனத்தில் சென்ற மோகன்ராஜ் (34) என்ற நண்பரையும் பிடித்து ரகசிய இடத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் 10 வயது சிறுமியை கார்த்திக் இருசக்கர வாகனத்தில் கடத்திச் சென்றதோடு கண்ணம்பாளையம் அருகே உள்ள தென்னந்தோப்பில் அவரை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்ததோடு உடலை குளத்தில் வீசி சென்றதும் தெரியவந்தது. மேலும் சிறுமி மாயமானது குறித்து எந்த தகவலும் போலீசார் முறையாக தெரிவிக்கவில்லை எனக் கூறி உறவினர்கள் மற்றும் பெற்றோர் பொதுமக்களுடன் இணைந்து சூலூர் பிரதான சாலையில் விடிய விடிய மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனிடையே சிறுமி கொலை செய்தது தெரிந்தும் மோகன்ராஜ் உறவினர்களுடன் சேர்ந்து சிறுமியை தேடுவது போல் நாடகமாடியதும் அம்பலமானது. உயிரிழந்த சிறுமியின் உடல் பிரேத பரிசோதனை செய்தபோது அவர் பாலியல் வன்கொடுமை செய்திருப்பதும், கொடூரமாக தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டதும் தெரியவந்தது. இந்நிலையில் உடற்கூறு ஆய்வு கூடத்தில் வைத்திருந்த சிறுமியின் உடலைக் கண்டு உறவினர்கள் கதறி அழுத சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. கொடூரமான முறையில் சிறுமி கொலை செய்யப்பட்ட நிலையில் இதுகுறித்து முதல்வர் ஒரு இரங்கல் அறிக்கை கூட விடவில்லை எனக் கூறி இ எஸ் ஐ மருத்துவமனையில் கூடியிருந்த பொதுமக்கள் ஆவேசப்பட்ட காட்சிகள் கூட வெளியானது.
மது போதையில் மனைவியை கொலை செய்த கணவன்
ஒருபுறம் கோவையில் 10 வயது சிறுமி கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வந்த சூழலில் அதே நாளில் மனைவியை கணவன் குத்தி கொலை செய்த சம்பவம் அரங்கேறியது. கோவை ராமநாதபுரம் சர்ச் ரோடு பகுதியைச் சேர்ந்த ஓய்வு பெற்ற தனியார் நிறுவன ஊழியர் ஜெயச்சந்திரன். மதுப்பழக்கத்திற்கு அடிமையான இவருக்கும், அவரது மனைவி தமிழ்ச்செல்விக்கும் (51) இடையே அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. மே 23 மதியம் ஜெயச்சந்திரன் மதுபோதையில் வீட்டிற்கு பிரியாணி வாங்கி வந்துள்ளார். குடும்பத்தினர் சாப்பிட்டு முடித்து, அவரது மகன் வேலைக்குச் சென்ற பின்பு, கணவன்-மனைவி இடையே மீண்டும் வாக்குவாதம் முற்றியுள்ளது. ஆத்திரமடைந்த ஜெயச்சந்திரன், சமையலறை கத்தியால் தமிழ்ச்செல்வியின் வயிற்றில் குத்தியுள்ளார். இதில் அவர் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். சம்பவ இடத்திற்கு விரைந்த ராமநாதபுரம் போலீசார், தமிழ்ச்செல்வியின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பியதோடு, ஜெயச்சந்திரனைக் கைது செய்து நீதிமன்றக் காவலில் அடைத்தனர். கோவையில் கடந்த ஆறு நாட்களில் அடுத்தடுத்து இரண்டு சிறார்கள் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டதோடு, தொழிலாளி ஒருவர் நிர்வாணப்படுத்தியும், குடும்பத்தகராறில் மனைவி கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவமும் அரங்கேறி, கோவை மாவட்டத்தை கொலை களமாக்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.