முன்னறிவிப்பு இன்றி அதிரடி பணிநீக்கம்! மாற்றுத்திறனாளி மாணவர்களின் எதிர்காலம் என்ன? கனிமொழி அவசர கடிதம்!
நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி ஒன்றிய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சர் டாக்டர் வீரேந்திர குமாருக்கு அவசரக் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
உரிய தேர்வு நடைமுறைகள் மூலம் 2024-ஆம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்டு, 2027-ஆம் ஆண்டு வரை பணிநீட்டிப்பு ஆணை வழங்கப்பட்டிருந்த இந்த ஊழியர்களை, எவ்வித முன்னறிவிப்போ முறையான விளக்கமோ இன்றி நிர்வாகக் காரணங்களைக் காட்டி அதிரடியாகப் பணிநீக்கம் செய்திருப்பது சட்டவிரோதமானது என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்நிறுவனத்தில் பயிலும் 588 மாற்றுத்திறனாளி மாணவர்களின் கல்வி, மறுவாழ்வு, சிகிச்சை மற்றும் தங்கும் விடுதிச் சேவைகளை இந்தத் திடீர் நடவடிக்கை முற்றிலும் முடக்கியுள்ளதோடு, அங்கு பணியாற்றிய ஊழியர்களின் வாழ்வாதாரத்தையும் கடுமையாகப் பாதித்துள்ளதால், இந்தத் தன்னிச்சையான பணிநீக்க உத்தரவை உடனடியாக நிறுத்தி வைக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
மேலும், இந்த ஒட்டுமொத்தப் பணிநீக்கச் சூழல் குறித்து ஒரு சுதந்திரமான விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும், மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான அத்தியாவசியச் சேவைகள் எவ்விதத் தடையுமின்றித் தொடர்வதை ஒன்றிய அமைச்சகம் உடனே தலையிட்டு உறுதி செய்ய வேண்டும் என்றும் அக்கடிதத்தில் அவர் மிகக் காத்திரமாகக் கேட்டுக்கொண்டுள்ளார்.