×

கவரப்பேட்டை: விபத்து பகுதியில் உயர்மட்ட விசாரணைக் குழு ஆய்வு..

 

கவரப்பேட்டை அருகே ரயில் விபத்து நிகழ்ந்த இடத்தில் வல்லுநர்கள் அடங்கிய உயர்மட்ட விசாரணைக் குழு ஆய்வு மேற்கொண்டு வருகிறது.  

திருவள்ளூர் அருகே கவரப்பேட்டையில்  நின்றுகொண்டிருந்த சரக்கு ரயில் மீது பயணிகள் ரயில் மோதி பயங்கர விபத்து ஏற்பட்டது.  மைசூரு- தர்பங்கா பாகமதி விரைவு ரயில் இரவு 8.30 மணியளவில் பொன்னேரியை கடந்து கவரப்பேட்டை ரயில் நிலையம் அருகே  வந்தபோது  மெயின் லைனில் செல்வதற்கு பதிலாக, லூப் லைனுக்குள் நுழைந்ததால் இந்த விபத்து நிகழ்ந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  ரயில் வேகமாக மோதியதால் ரயில் தடம் புரண்டு 2 பெட்டிகள் எரிந்து சேதமடைந்தன. இந்த ரயில் விபத்தில் 13 பெட்டிகள் தடம்புரண்டன.   20 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.   

இந்நிலையில் இந்த விபத்தில் தண்டவாளங்களின் இணைப்பு துண்டிக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து விபத்துக்கு நாசவேலை காரணமா என போலீஸார் விராசணை மேர்கொண்டு வருகின்றனர். மேலும், ரயில் விபத்து குறித்து முழுமையான விசாரணை நடத்த தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர்.என். சிங் தலைமையில் உயர்மட்ட விசாரணை குழு அமைக்கப்பட்டு உள்ளது.  இந்த குழுவினர் கவரப்பேட்டை அருகே விபத்து நடந்த இடத்தில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.  

 ரயிலை இயக்குதல், சிக்னல், தொழில்நுட்ப கோளாறுக்கான காரணங்களை ஆராய்ந்து அதன் அறிக்கை சமர்ப்பிப்பார்கள்.  மனித தவறா அல்லது தொழில்நுட்ப கோளாறுகள் கண்டு பிடிக்கப்பட்டு, அதன் படி உயர்மட்ட குழுவினர் துறை ரீதியான நடவடிக்கை மேற்கொள்வர். அதன்படி, தண்டவாளத்தில் இணைப்பு துண்டிக்கப்பட்ட இடத்தில் மோப்ப நாய்கள் வைத்து ஆய்வு செய்து வருகின்றனர்.  மேலும், பிரதான வழித்தடத்தில் இருந்து லூப் தடத்திற்கு மாறிச் சென்ற இடத்தில் பெங்களூரு ரயில்வே பாதுகாப்பு வல்லுநர் குழு ஆய்வு மேற்கொண்டுள்ளது.