ரேஷன் கடைகளில் காலாவதியான பாமாயில் விநியோகம்
செங்குன்றம் அருகே காலாவதியான பாமாயில் ரேஷன் கடையில் விநியோகம் செய்யப்பட்டது. காலாவதியான எண்ணெய் வழங்கிய ஊழியர்களுடன் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் அடுத்த விளங்காடுபாக்கம் ஊராட்சியில் உள்ள நியாய விலை கடையில் இன்று காலாவதியான பாமாயில் விநியோகம் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பொது விநியோக திட்டத்தின் கீழ் பொதுமக்களுக்கு இன்று வழக்கம் போல சர்க்கரை, அரிசி, பாமாயில் உள்ளிட்ட பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டு வந்தன. அப்போது பாமாயில் பாக்கெட்டுகளில் இருந்த காலாவதி தேதியை பார்க்கும் போது 1 மாதத்திற்கு முன்பே காலவதியான பாமாயில் பாக்கெட்டுகள் என்பது தெரிய வந்தது.
இதனை கண்டு அதிர்ச்சியடைந்த வாடிக்கையாளர்கள் இது தொடர்பாக நியாய விலை கடை விற்பனையாளரிடம் கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தவறுதலாக காலாவதியான எண்ணெய் பாக்கெட்டுகள் வழங்கப்பட்டதாக கூறி அவற்றை திரும்ப பெற்று கொண்டு புதிய பாமாயில் பாக்கெட்டுகளை நியாய விலை கடை ஊழியர்கள் வழங்கினர். பாமாயில் பாக்கெட்டுகளை நியாய விலை ஊழியர்கள் பொதுமக்களுக்கு விநியோகம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.