திருச்செந்தூர் கோவிலுக்கு தரிசனம் செய்ய வந்த சிறுமிகள் ஆற்றில் மூழ்கி உயிரிழப்பு
தூத்துக்குடி மாவட்டம் ஏரல் தாமிரபரணி ஆற்றில் நீரில் மூழ்கி தேனி மாவட்டத்தைச் சேர்ந்த அபிநயா(16), மீனாட்சி (12) ஆகிய இரு சகோதரிகள் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் குறித்து ஏரல் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தேனி மாவட்டத்தைச் சேர்ந்தவர் சங்கரகுமார். இவரது தனது குடும்பத்தினருடன் இன்று திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு சுவாமி தரிசனம் செய்வதற்காக வந்துள்ளார். மாலையில் சுவாமி தரிசனம் செய்ய இருந்த நிலையில் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள ஏரல் அருணாச்சல சுவாமிகள் கோவிலில் சுவாமி தரிசனம் செய்து விட்டு செல்லலாம் என்று வந்துள்ளனர். அவருடன் அவரது மகள்கள் அபிநயா(16), மீனாட்சி (12) ஆகிய இருவரும் வந்துள்ளனர். சாமி தரிசனம் செய்து விட்டு அருகே உள்ள தாமிரபரணி ஆற்றில் நீராட வந்துள்ளனர். சகோதரிகள் இருவரும் ஆற்று நீரை பார்த்ததும் உடன் வந்தவர்களுக்கு முன்பு வேகமாக சென்று ஆற்றில் குதித்துள்ளனர். ஆற்றுக்குள் குதித்த இருவரும் திடீரென காணாமல் போனார்கள். உடனடியாக அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் உதவியுடன் ஏரல் தீயணைப்புத் துறையினர் மற்றும் ஏரல் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
சம்பவ இடத்திற்கு விரைந்த வந்த ஏரல் தீயணைப்புத்துறை அதிகாரிகள் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக ஆற்றில் தேடி ஒரு குழந்தை இறந்த நிலையில் மீட்கப்பட்டது. மற்றொரு குழந்தை மூச்சு இருந்ததை கண்டனர். ஆற்றுக்குள் அதிக அளவு மணல் இருந்ததால் வாகனம் உள்ளே செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. உடனடியாக கையில் அந்த குழந்தையை தூக்கியபடி சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு வேகமாக வந்தவர்கள் அதன்பிறகு வாகனத்தில் ஏற்றி ஏரல் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு வந்தனர். ஆனால் அதற்குள் அந்த குழந்தையும் பரிதாபமாக உயிரிழந்தது. ஆற்றுக்குள் இருந்து சகோதரிகள் உடலை மீட்டதை கண்டு குழந்தைகளின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் கதறி அழுதது பார்ப்போரை கண் கலங்க செய்தது. திருச்செந்தூர் முருகனை தரிசனம் செய்ய வந்த இடத்தில் தாமிரபரணி ஆற்றில் மூழ்கி சகோதரிகள் உயிரிழந்த சம்பவம் ஏரல் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.