திறக்கப்பட்ட 3 மாதங்களிலேயே தரைப்பாலம் சேதம்- மக்கள் போராட்டம்
சாத்தூர் அருகே வைப்பாற்றின் குறுக்கே 25 ஆண்டுகளுக்கு முன்பு திமுக ஆட்சியில் கட்டப்பட்ட தரைப்பாலமானது, திறக்கப்பட்ட 3 மாதங்களிலேயே சேதமடைந்து தற்போது வரை அதையே பொதுமக்கள் பயன்படுத்தி வரும் நிலையில், தற்போதாவது அதை சரிசெய்து தர ஊர் மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே வெம்பக்கோட்டை பகுதிக்கு உட்பட்ட இறவார்பட்டி- அச்சங்குளம் இடையே வைப்பாறு செல்கிறது, இங்கு செல்லக்கூடிய வைப்பாற்று நதியின் குறுக்கே 25 ஆண்டுகளுக்கு முன்பு அப்பகுதி மக்களின் போக்குவரத்து பயன்பாட்டிற்காக சிறிய தரைபாலம் அமைக்கப்பட்டது, அவ்வாறு அமைக்கப்பட்ட பாலம் கட்டி முடித்த மூன்று மாதங்களில் மழை வெள்ளத்தால் அடித்து செல்லப்பட்டது. அன்று முதல் இன்று வரை பாலத்தை சரி செய்யவில்லை மேலும் இந்த தரை பாலம் வழியாகத்தான் அச்சங்களும் கிராமத்தில் உள்ள பொதுமக்கள் இரவார்பட்டியில் உள்ள ரேஷன் கடைக்கு வந்து தான் பொருட்கள் வாங்க வேண்டிய நிலைமை உள்ளது. ஆனால் ஆண்டுதோறும் வெம்பக்கோட்டையில் நீர்த்தேக்கம் அணையில் இருந்து திறந்துவிடும் தண்ணீரால் போக்குவரத்து தடைப்படுவதாகவும் ரேஷன் பொருட்கள் எதுவும் வாங்க முடியாமல் தவிப்பதாகவும் கூறுகின்றனர்.
மேலும் சுமார் 20 கிராமங்களில் உள்ள பொதுமக்கள் இந்தப் பாலம் வழியாக ஏழாயிரம்பண்ணை- கோவில்பட்டி உள்ளிட்ட பகுதிகளுக்கு பயணித்து வந்த நிலையில் இந்த தரைப்பாலம் தற்போது முற்றிலும் சேதம் அடைந்து காணப்படுகிறது.