நவ.1 முதல் வால்பாறைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு இ-பாஸ் கட்டாயம்
நவம்பர் ஒன்றாம் தேதி முதல் வால்பாறைக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் இ-பாஸ் பெற வேண்டும் என கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார் உத்தரவிட்டுள்ளார்.
தமிழகத்தில் வால்பாறை, பொள்ளாச்சி உள்ளிட்ட இடங்கள் சுற்றுலாத்தலங்களில் முக்கியமானவை. இங்கு இயற்கை அழகை ரசிக்கவும்,கொண்டை ஊசி வளைவுகளைக் கொண்ட மலைப்பாதையின் வளைவுகளில் பயணிக்கவும்,வனப்பாதையில் காட்டு விலங்குகளை காணவும்,தமிழக மட்டுமின்றி அண்டை மாநிலங்களான கேரளா ,கர்நாடகா ஆந்திரா உள்ளிட்ட இடங்களில் இருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வந்து செல்வது வழக்கம். அவ்வாறு வரும் சுற்றுலா பயணிகளுக்கு ஆழியார் சோதனை சாவடி அருகே நுழைவு கட்டணம் வசூலிக்கப்படும்.
இந்நிலையில் வரும் நவம்பர் ஒன்றாம் தேதி முதல் சுற்றுலாப் பயணிகளுக்கு ஆழியார் சோதனைச் சாவடியில் இ பாஸ் நடைமுறை அமல்படுத்தப்படும் என கோவை மாவட்ட ஆட்சியர் பவன் குமார் உத்தரவிட்டுள்ளார். வால்பாறைக்கு செல்ல இ-பாஸ் பெறுவதற்கு இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி http://epass.tnega.org என்ற தளம் வாயிலாக இ-பாஸ் பெறலாம். ஆழியார், சோலையார் சோதனை சாவடிகளிலும் இ-பாஸ் பெறலாம் என்றும் அவர் கூறியுள்ளார்.