“போனில் கூட நன்றி சொல்லல... காங்கிரஸ்காரர்கள் நன்றி கெட்டவர்கள்” - ஆர்.எஸ்.பாரதி
காங்கிரஸ்காரர்கள் நன்றி கெட்டவர்கள் என ஆர்.எஸ்.பாரதி விமர்சித்துள்ளார்.
வாக்கு எண்ணிக்கை தினமான 4ம் தேதி அன்று தோல்வி அடைந்து கொண்டிருக்கும்போதே பாஜகவின் ஆணைக்கினங்க திமுகவும் அதிமுகவும் ஆட்சி அமைக்க திட்டமிட்டது. 4ம் தேதி மூன்று மணியளவில் பாஜகவின் முக்கிய தலைவர் அதிமுக மற்றும் திமுக தலைவர்களை தொடர்பு கொண்டு பேசினார். பாஜக அதிமுகவிற்கும் திமுகவிற்கும் கனெக்டிங் கால் போட்டுவிட்டது, வாக்கு எண்ணிக்கை நடந்த தினம் டெல்லியில் இருந்து பாஜகவின் ஆணைக்கினங்க திமுகவும் அதிமுகவும் இணைந்து ஆட்சி அமைக்க முடிவு எடுத்ததை தெரிந்து கொண்டுதான் திமுகவிடம் சொல்லாமலேயே காங்கிரஸ் தமிழக வெற்றி கழகம் ஆட்சி அமைக்க ஆதரவு கொடுத்தது என விருதுநகர் எம்பி மாணிக்கம் தாகூர் பரபரப்பு பேட்டி அளித்தார்.
இந்நிலையில் இதற்கு விளக்கம் அளித்துள்ள திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, “மாணிக்கம் தாகூர் கூறுவது அப்பட்டமான பொய். தேர்தல் முடிவு வந்தபின்பு காங்கிரசாரை தவிர மற்ற அனைவரும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை வந்து சந்தித்தார்கள். தொலைபேசியில் கூட நன்றி தெரிவிக்காமல் சென்றவர்கள் காங்கிரஸ் கட்சியினர். அவர்கள் தான் நன்றி கெட்டவர்கள்” என்றார்.