×

இப்போதாவது, இதற்காகவாவது முதல்வர் வாய் திறந்து பேசுவாரா..?- கே.என்.நேரு

 

மேகதாதுவில் அணை கட்டும் புதிய விரிவான திட்டத்தை ஒன்றிய அரசிடம் வழங்கப் போவதாக கர்நாடக மாநில துணை முதலமைச்சர் டி.கே.சிவகுமார் சொல்லி இருப்பது கடுமையாக கண்டிக்கத்தக்கது என திமுக முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு கூறியுள்ளார்.

இதுதொடர்பாக கே.என்.நேரு வெளியிட்டுள்ள அறிக்கையில், “மேகதாதுவில் அணை கட்டும் புதிய விரிவான திட்டத்தை ஒன்றிய அரசிடம் வழங்கப் போவதாக கர்நாடக மாநில துணை முதலமைச்சர் டி.கே.சிவகுமார் சொல்லி இருப்பது கடுமையாக கண்டிக்கத்தக்கது.திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் இதனை வன்மையாகக் கண்டிக்கிறோம்.காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டும் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்க தமிழ்நாட்டுக்கு எந்த உரிமையும் இல்லை என்றும் டி.கே.சிவக்குமார் அவர்கள் சொல்லி இருப்பது அவரது ஆணவப் போக்கைக் காட்டுகிறது. தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் நடந்து விட்டது. பலவீனமான கூட்டணி அரசுதானே அமைந்துள்ளது என்ற எண்ணத்தில் சிவக்குமார் இப்படி பேசி இருப்பது போலத் தெரிகிறது. தங்களது காங்கிரஸ் கட்சியும் ஆட்சியில் அங்கம் வகிப்பதால் எதிர்ப்பு இருக்காது என்று நினைத்து, துடுக்குடன் வார்த்தைகளை விட்டுள்ளார் அவர். மேகதாதுவில் அணை கட்டும் விஷயத்தில் கர்நாடக அரசு உறுதியாக இருப்பதாக சிவக்குமார் சொல்லி இருக்கிறார். காவிரி நதியில் தமிழ்நாட்டின் உரிமையை நிலைநாட்ட எங்கள் கழகத் தலைவர் எந்தவிதத் தியாகம் செய்யவும் தயங்க மாட்டார்.

மேகதாது அணையைக் கர்நாடகம் கட்டுவது என்பது, ஒட்டுமொத்தமாக தமிழ்நாட்டுக்கு இழைக்கும் துரோகம்! உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பின் படி, காவிரியின் கீழ்ப்படுகை மாநிலங்களின் முன் அனுமதியைப் பெறாமல் மேகதாதுவில் எந்தவொரு கட்டுமானப்பணியையும் மேற்கொள்ளக் கூடாது. அதை மீறித் தற்பொழுது மேகதாதுவில் அணை கட்டும் திட்டத்தினை கர்நாடக அரசு முழு முனைப்புடன் செய்து வருவது டெல்டா விவசாயிகள் மத்தியில் பெரும் அச்சத்தையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தி உள்ளது. காவிரி உரிமைகளை நசுக்கும் விதமாக அமைந்துள்ள கர்நாடக மாநில துணை முதலமைச்சரின் பேச்சுக்கு தமிழ்நாட்டின் முதலமைச்சர் இப்போதாவது வாய் திறந்து கண்டிக்க வேண்டும். தமிழ்நாட்டின் போராட்டங்கள் விழலுக்கு இறைத்த நீராகி விடக்கூடாது. காவிரி விவகாரத்தில் ஒட்டுமொத்தத் தமிழ்நாடும், அனைத்து அரசியல் இயக்கங்களும் ஒரே குரலில் ஒலிக்கிறது - ஒரே உணர்வில் இயங்குகிறது என்பதை, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், தங்களுடன் கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ் கட்சியின் கர்நாடக அரசுக்கு அழுத்தமாகத் தெரிவிக்க வேண்டும். மேகதாதுவில் அணை கட்டும் அவர்களது முயற்சியை துவக்கத்திலேயே முறியடிக்க வேண்டும். இப்போதாவது - இதற்காகவாவது மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களே வாய் திறந்து பேசுவாரா என மக்கள் காத்திருக்கிறார்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.