×

“திட்டமிட்டு பியூஸ் கேரியர் பிடுங்கப்படுகிறது”- நிர்மல்குமார் குற்றச்சாட்டு

 

வேண்டுமென்றே ஏற்படுத்தப்படும் மின்வெட்டு குறித்து கண்காணித்து நடவடிக்கை எடுக்கிறோம் என அமைச்சர் நிர்மல்குமார் கூறியுள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் நிர்மல்குமார், “ஒரு சில தவறான நபர்களின் சதி வேலையால் வேண்டுமென்றே ஃபியூஸ்களை பிடுங்கி மின்வெட்டு ஏற்படுத்திய சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த விஷயத்தில் பொதுமக்களும் எங்களுக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். எங்கெல்லாம் மின்வெட்டு உள்ளதோ, அதனை எவ்வளவு நேரத்தில் சரிசெய்கிறோம் என்பதை மின் துறையின் சமூக வலைதளப் பக்கத்தில் உடனுக்குடன் தெரிவித்துவருகிறோம். சோலார் மின் உற்பத்தியை அதிகரிப்பதன் மூலம் மின்தேவையை பூர்த்தி செய்வோம்.. Power Generation மட்டும் தனியாரிடம் செல்கிறது.. அனைத்து கட்டமைப்புகளும் TNEB-யிடம் தான் இருக்கும் 

தமிழ்நாட்டில் சில அரசியல் சக்திகள் தங்களின் சுயலாபத்திற்காக வேண்டுமென்றே மின் தடையை ஏற்படுத்துகின்றன. மக்களை சாலை மறியலில் ஈடுபட தூண்டிவிடுகின்றனர். பொதுமக்கள் வேறு யாரோ ஒருவரின் தூண்டுதலின் பேரில் போராட்டம் நடத்துகிறார்கள். பெரம்பூரில் ஏற்பட்ட மின்வெட்டு 40 நிமிடங்களில் சரி செய்யப்பட்டாலும் சிலரின் தூண்டுதல் பேரில் போராட்டம் நடந்தது. சூரியஒளி மின்சக்தி உற்பத்திக்கு விரைவில் புதிய கொள்கை ஏற்படுத்தப்படும். மின்தடை ஏற்படும் இடங்களில் உடனடியாக சரி செய்யப்பட்டு வருகிறது. மின்வெட்டு தொடர்பாக வட சென்னையில் 20 நபர்கள் கொண்ட 3 குழுக்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். பிரச்சனைகள் இருக்கும் இடத்தில் உடனடியாக தீர்வு காணப்படும்” என்றார்.