பாதுகாப்பான முறையில் பட்டாசுகளை வெடியுங்கள்.. மாணவர்களுக்கு பள்ளிக் கல்வித்துறை அறிவுறுத்தல்..!
Oct 14, 2025, 06:15 IST
பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் கண்ணப்பன் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பியுள்ள கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:
பட்டாசுகளை கொளுத்தும்போது தளர்வான ஆடைகள் உடுத்துவதை தவிருங்கள். டெரிகாட்டன், டெரிலின் ஆகிய எளிதில் தீ பற்றக்கூடிய ஆடைகளை அணியக்கூடாது.
- பட்டாசுகள் கொளுத்தும் இடத்திற்கு அருகே ஒரு வாளி தண்ணீர் வைத்துக்கொள்ளுங்கள்.
- பட்டாசுகளை கொளுத்தி கையில் வைத்துக்கொண்டு வெடிக்க வேண்டாம். மாறாக, பாதுகாப்பாக தொலைவில் வைத்தே வெடியுங்கள்.
- பாட்டில்களில் பட்டாசுகளை உள்ளே செலுத்தி வெடிக்க செய்யாதீர்கள்.
- ராக்கெட்டுகளை வெட்ட வெளியில் குடிசைகள் இல்லாத பகுதிகளில் மட்டுமே செலுத்துங்கள்.
- பட்டாசுகளை கூட்டமான பகுதிகளிலும் தெருக்களிலும் மற்றும் சாலைகளிலும் வெடிக்காதீர்கள்.
- பட்டாசுகளை விற்பனை செய்யும் கடைக்கு முன்னரோ அருகிலோ வெடிக்காதீர்கள்.
- குழந்தைகள் பட்டாசுகளை பெற்றோர்களின் முன்னிலையில் அவர்களது பாதுகாப்பின் கீழ் வெடிக்க வேண்டும்.
- மருத்துவமனைக்கு அருகாமையில் பட்டாசுகளை வெடிக்காதீர்கள்.
- விலங்குகளை துன்புறுத்தும் வகையிலும் அவைகள் பயப்படும் வகையிலும் பட்டாசுகளை வெடிக்காதீர்கள்.
- பெட்ரோல் பங்குகளுக்கு அருகாமையில் பட்டாசுகளை வெடிக்காவோ . கொளுத்தவோ செய்யாதீர்கள்.
- இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை பட்டாசுகளை வெடிக்காதீர்கள்.
- அதிக சப்தமுள்ள பட்டாசுகளை வெடிக்க வேண்டாம். ஏனெனில் அது உடலையும் மனநிலையும் பாதிக்கும். காதுகள் செவிடாகக் கூடும். ஒருநாள் கொண்டாட்டத்திற்காக வாழ்நாள் முழுவதும் துன்பப்பட வேண்டாம்.
- குழந்தைகள் மற்றும் வயதானோர் இருக்கும் இடங்களில் பட்டாசுகளை வெடிக்க வேண்டாம்.
- கடந்த ஆண்டை போன்றே இந்த ஆண்டும் அரசின் நடைமுறைகளை பின்பற்றி செயல்படுத்தி மகிழ்ச்சி நிறைந்த விபத்து இல்லாத தீபாவளியாக கொண்டாடும் வகையில் தலைமை ஆசிரியர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்திட வேண்டும்.
- தலைமையாசிரியர்கள் பள்ளியின் காலை இறை வணக்கத்துக்கு பிறகோ அல்லது அணி திரளும்போதோ தோராயமாக 5 நிமிடங்களுக்கு தீபாவளி பண்டிகைக்கு முன்னதாக தீ பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து விரைவுயாற்ற வேண்டும்.
- மாணவர்களிடையே தீபாவளி பண்டிகையினை விபத்தில்லா வகையில் எவ்வாறு கொண்டாடுவது என்பது குறித்து அவர்களது அறிவுக்கூர்மையை சோதித்து பார்த்தல் வேண்டும்.
- ஒரு குறிப்பிட்ட இடைவெளி தருணத்தில் 5 -லிருந்து 10 நிமிடம் தீ பாதுகாப்பு செய்திகள் குறித்து நிகழ்ச்சி நடத்துதல் வேண்டும்.
- தீ பாதுகாப்பு குறித்து வரைபட போட்டி நடத்தி சிறந்ததாக தேர்ந்தெடுக்கப்படும் வரைபடத்திற்கு பரிசளித்தல் வேண்டும்.
- வெடிக்காத பட்டாசுகளை குனிந்து பரிசோதிப்பதை தவிர்த்தல் வேண்டும்.
- விவரம் அறியாத இளஞ்சிறார்களை வெடிகளை கொளுத்த அனுமதிக்காமல் இருத்தல் வேண்டும்.