மக்கள் பிரச்சனைகளை வெளியிடுவதால் பாலிமர் உள்ளிட்ட ஊடகங்களை பழிவாங்கும் தவெக அரசு- அண்ணாமலை
ஜனநாயகத்தில், செய்திகளைத் தடை செய்வது தீர்வல்ல. இது மிகவும் தவறான போக்கு. உடனடியாக, இந்தச் செய்தி ஊடகங்களை அரசு கேபிள் நிறுவனத்தில் வெளியிட வேண்டும் என்று, தவெக அரசை வலியுறுத்துவதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அண்ணாமலை தனது எக்ஸ் தளத்தில், “தமிழக அரசு கேபிள் ஒளிபரப்பிலிருந்து, பாலிமர், நியூஸ் தமிழ் 24x7 மற்றும் தமிழ் ஜனம் ஆகியவை நீக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. அரசு கேபிள் நிறுவனம், செட்டாப் பாக்ஸ் நிறுவனத்துக்கு வைத்திருக்கும் நிலுவைத் தொகை காரணமாக, ஒளிபரப்பு நிறுத்தப்பட்டுள்ளதாகக் காரணம் கூறப்படுகிறது. கட்டணப் பிரச்சினை காரணம் என்றால், ஏன் மற்ற ஊடகங்களுக்கு எந்தப் பாதிப்பும் இல்லை? குறிப்பாக, இந்த மூன்று ஊடகங்களும், மின்வெட்டாலும், தவெக அரசின் நிர்வாகத் திறனின்மையாலும், பொதுமக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளைக் குறித்த செய்திகளைத் தொடர்ந்து வெளியிட்டு வருவதால், தவெக அரசு இந்த ஊடகங்களைப் பழிவாங்கும் விதமாக நடந்து கொள்வதாகவே தெரிகிறது. ஜனநாயகத்தில், செய்திகளைத் தடை செய்வது தீர்வல்ல. இது மிகவும் தவறான போக்கு. உடனடியாக, இந்தச் செய்தி ஊடகங்களை அரசு கேபிள் நிறுவனத்தில் வெளியிட வேண்டும் என்று, தவெக அரசை வலியுறுத்துகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.