×

“செங்கோட்டையனை நீக்கும் அதிகாரம் ஈபிஎஸ்க்கு இல்லை”- டிடிவி தினகரன்
 

 

பசும்பொன்னில் நடைபெற்றது அரசியல் ரீதியான சந்திப்பு இல்லை, செங்கோட்டையனை நீக்கும் அதிகாரம் எடப்பாடி பழனிசாமிக்கு இல்லை என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

மதுரை சோழவந்தானில் அமமுக கட்சி நிர்வாகிகளுடனான ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்ற பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அக்கட்சியின் பொது செயலாளர் டிடிவி தினகரன், “தொண்டர்கள் ஒன்றிணைய வேண்டுமென செங்கோட்டையன் சொல்லிக்கொண்டிருந்தார். எம்.ஜி.ஆர் காலம் முதல் உள்ள மூத்த தலைவர் செங்கோட்டையன். மூத்த நிர்வாகிகளில் இன்றும் சட்டமன்ற உறுப்பினராக இருப்பவர் அவர் மட்டுமே. பசும்பொன்னில் நடைபெற்றது அரசியல் ரீதியான சந்திப்பு அல்ல. "கெடுவார் கேடு நினைப்பார்" என்பது பழனிச்சாமிக்கு பொருந்தும். செங்கோட்டையனை கட்சியை விட்டு நீக்கும் அதிகாரம் எடப்பாடி பழனிச்சாமிக்கு இல்லை.

பதவி கொடுத்த சசிகலாவை துரோகி என்கிறார் எடப்பாடி பழனிசாமி. செங்கோட்டையன் போன்ற மூத்த நிர்வாகியை நீக்கியது கொள்ளி கட்டையை எடுத்து தன் தலையை தானே சொறிந்து கொண்டது போல தான். எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவாக சட்டமன்றத்தில் வாக்களித்த 18 உறுப்பினர்களை நீக்கிய எடப்பாடி பழனிசாமி துரோகியா? நான் துரோகியா? துரோகத்தை பற்றி பேசுவதற்கு கூட தகுதி இல்லாதவர் எடப்பாடி பழனிசாமி. தேவர் ஜெயந்திக்கு வந்த செங்கோட்டையனை நீக்கியதை தென் தமிழக மக்கள் தங்களுக்கு நேர்ந்த அவமானமாக கருதுகிறார்கள். உறுதியாக இந்த தேர்தலில் அது எதிரொலிக்கும். 2021 தேர்தலில் திமுக ஆட்சிக்கு வர காரணமாக இருந்தது எடப்பாடி பழனிசாமி தான். அவர் தான் திமுகவின் உண்மையான பி டீம். இந்த தேர்தலில் மிக மோசமான தோல்வியை தென் தமிழகத்தில் பழனிசாமி சந்திப்பார். கொடைநாடு கொலை வழக்கை பற்றி பேசினாலே பழனிச்சாமி பதறுவது ஏன்? எம்.ஜி.ஆர் உருவாக்கிய கட்சி விதிகள் பழனிச்சாமிக்கு தெரியாதா? விதிகளையே திருத்தி கேவலப்படுத்தியவர் பழனிசாமி. விதிகளையே புறந்தள்ளியவர் விதியை பற்றி பேச என்ன தகுதி இருக்கிறது? 2026 தேர்தல் ஒரு சூரசம்ஹாரம். அதில் பழனிசாமி எனும் அரக்கர் வீழ்த்தப்படுவார்” என்றார்