×

“ஈபிஎஸ் பரப்புரைக்கு செல்வோருக்கு 100 நாள் வேலை கிடையாதா?”

 

அரவக்குறிச்சி சட்டமன்றத் தொகுதியில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம் மேற்கொண்டார்.

அப்போது பேசிய எடப்பாடி பழனிசாமி, “தாழ்த்தப்பட்ட மக்களுக்கு 25,000 பேருக்கு கான்கிரீட் வீடுகள் கட்டித்தருவோம் என்றார் செந்தில் பாலாஜி. ஆனால் இதுவரை செய்யவில்லை. அதிமுக ஆட்சிக்கு வந்ததும், தாழ்த்தப்பட்ட மக்கள், அருந்ததியின மக்களுக்கு கான்கிரீட் வீடுகள் கட்டித் தரப்படும். தமிழகத்தில் 196 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில், 96 கல்லூரிகளில் தலைமை ஆசிரியர் பொறுப்புகள் நிரப்பப்படாமல் உள்ளன. இப்படியான நிலையில் தான் கல்வியில் சிறந்த மாநிலம் தமிழ்நாடு என பொய் பேசுகிறார் ஸ்டாலின். திமுக ஆட்சியில் 207 பள்ளிகளை இழுத்து மூடிவிட்டார்கள். தெலங்கானா மாநில அமைச்சரை அழைத்து நிகழ்ச்சி நடத்தியுள்ளார்கள், ஏனெனில் அவருக்கு உண்மை நிலை தெரியாது. அதிமுக ஆட்சியில் 20,000 ஆசிரியர்களுக்கு ஒரே நேரத்தில் பணி ஆணை வழங்கினோம். அதிமுக ஆட்சியில் தான் கல்விக்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டது. இவர்கள் கல்வியில் சிறந்த தமிழ்நாடு என கொண்டாடுகிறார்களாம். அதிமுக ஆட்சியில் தான் அதிகமான பள்ளிகள் திறக்கப்பட்டன, அதனால் கற்போர் எண்ணிக்கை அதிகரித்தது. திமுக ஆட்சியில் குறைந்துள்ளது.

திமுக ஆட்சியில் போதைப்பொருள் புழக்கம் அதிகரித்துவிட்டது. கஞ்சா விற்பனை அதிகரித்துவிட்டது. பல்வேறு குற்றங்கள் நடப்பதற்கு, போதைப்பொருள் பயன்பாடே காரணம் என பலமுறை சுட்டிக்காட்டியும், முதல்வர் ஸ்டாலின் கண்டுக்கொள்ளவில்லை. இந்த ஆட்சி தொடரணுமா? செந்தில் பாலாஜி மீது நிறைய வழக்குகள் உள்ளன. தேர்தல் முடியும் வரை அவர் கரூரில் இருப்பாரா என்றே தெரியாது. வழக்கு விரைவாக நடந்து, தீர்ப்பளிக்கப்பட்டால் நீங்கள் இருக்கும் இடம் கரூராக இருக்காது. ஊருக்கும், வீட்டிற்கும் அடங்காத பிள்ளை உதவாது. 2026 சட்டமன்றத் தேர்தலில் இங்கிருக்கும் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி பல அவதாரம் எடுப்பார். வெள்ளிக் கொலுசு உட்பட பலவற்றை கொடுப்பார். அது கொள்ளை அடித்த பணம். என்ன கொடுத்தால் வாங்கிக்கொள்ளுங்கள். ஒட்டு மட்டும் அதிமுகவுக்கு போடுங்கள். 1987ல் நான் அதிமுகவில் இணைந்த நாளில் இருந்து இன்று வரை நான் அதிமுகவில் தான் உள்ளேன். விசுவாசத்துடன் இருக்கிறேன். என்னை போல, இந்த திமுக அரசை எதிர்க்கும் துணிச்சல் இங்குள்ள சகோதரர் விஜயபாஸ்கருக்கும் உள்ளது. எங்களோடு நீங்கள் தயங்காமல் வரலாம். அதிமுகவின் நிகழ்ச்சியில் கலந்துக்கொள்வோர் 100 நாள் வேலை திட்டத்தின் கீழ் வேலை செய்ய அனுமதிக்க முடியாது என அதிகாரிகள் கூறுவதாக தகவல் உள்ளது. 100 நாள் வேலைத் திட்டம் மக்களுக்கான திட்டம். அப்படியான அதிகாரிகள் அதிமுக ஆட்சியில் தண்டிக்கப்படுவர்” என பேசினார்.