திண்டுக்கல்லில் 4 பேர் மீது ஆசிட் வீச்சு! வீட்டின் அருகே விளையாடியதால் ஆத்திரம்
திண்டுக்கல் அருகே உள்ள பெரிய பள்ளப்பட்டியில் வீட்டின் அருகே சீட்டு விளையாடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து நான்கு பேர் மீது ஆசிட் வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் அருகே உள்ள பெரியபள்ளப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் மகேந்திரன். இவர் தோல் பதனிடும் தொழிற்சாலையில் வேலை பார்த்து வருகிறார். இவரது வீட்டின் அருகே பெரிய மரங்கள் உள்ளது. மரத்தின் நிழலில் அருகே உள்ள வீடுகளில் வசித்து வரக்கூடிய லட்சுமணன், லட்சுமி, சென்றாயன், ராஜா ஆகியோர் மரத்தடியில் அமர்ந்து சீட்டு விளையாட்டு வந்துள்ளனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த மகேந்திரன் இங்கு சீட்டு விளையாட கூடாது என கூறியுள்ளார். இதனைக் கேட்காமல் தொடர்ந்து பல நாட்களாக சீட்டு விளையாடி வந்துள்ளனர்.
இந்நிலையில் இன்றும் மரத்தடியில் அமர்ந்து சீட்டு விளையாடி வந்துள்ளனர். அப்பொழுது மகேந்திரன் சீட்டு விளையாடக்கூடாது என கூறியுள்ளார் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக மகேந்திரனுக்கும் சீட்டு விளையாடிய ராஜா, லட்சுமணன், சென்ராயன், ஆகியோர் கூறிய வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த மகேந்திரன் தனது வீட்டில் வைத்திருந்த தோல் கழிவுகளை சுத்தம் செய்ய பயன்படுத்தக்கூடிய ஆசிட்டை எடுத்து வந்து நான்கு பேர் மீதும் ஊற்றியுள்ளார். ஆசிட் வீச்சில் படுகாயம் அடைந்த நான்கு பேரும் திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு உள்ளனர்.
இது தொடர்பாக திண்டுக்கல் தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து மகேந்திரனை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பெரிய பள்ளப்பட்டி பகுதியில் ஆசிட் வீச்சு சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனிடையே அதிமுக முன்னாள் அமைச்சரும் திண்டுக்கல் சட்டமன்ற உறுப்பினருமான சீனிவாசன் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நான்கு பேரையும் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.