×

சா்ச்சைக்குரிய பதிவு- வழக்கை ரத்து செய்யக்கோரி ஆதவ் அர்ஜூனா மனுதாக்கல்

 

சமூக ஊடகத்தில் சா்ச்சைக்குரிய வகையில் பதிவிட்டதாக தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தவெக தோ்தல் பிரசார மேலாண்மை பொதுச் செயலாளர்  ஆதவ் அர்ஜூனா மனு தாக்கல் செய்துள்ளார்.

கரூா் விஜய்யின் பிரசார நெரிசல் ஏற்பட்ட உயிரிழப்புகள் தொடா்பாக சமூக ஊடகங்களில் போலி வீடியோக்கள், புகைப்படங்கள், தவறான கருத்துகள் பரப்பப்படுவதாகப் புகாா் எழுந்தது. இதையடுத்து, சமூக ஊடகங்களில் இத்தகைய பொய்யான தகவல்களைப் பரப்புவோா் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை பெருநகர காவல் துறை எச்சரிக்கை விடுத்தது.  இந்த நிலையில், தவெக தோ்தல் பிரசார மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜூனா, கரூா் சம்பவம் தொடா்பாக எக்ஸ் தளத்தில், வன்முறையில் ஈடுபட்டு, புரட்சியை உண்டாக்க வேண்டும் என்று சில கருத்துகளைத் தெரிவித்திருந்தாா். இந்தப் பதிவை சிறிது நேரத்தில் ஆதவ் அர்ஜூனா நீக்கியுள்ளாா்.

இந்த பதிவின் அடிப்படையில் ஆதவ் அர்ஜூனா மீது சென்னை சைபா் குற்றப்பிரிவு போலீஸாா், வன்முறையைத் தூண்டுவது, இரு பிரிவினா் இடையே பகையை தூண்டுவது, இந்திய இறையாண்மைக்கு எதிராக செயல்படுவது, வதந்தியை பரப்புவது உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இது தொடர்பான வழக்கை விசாரித்த நீதிபதி என். செந்தில்குமார் இதன் பின்புலத்தை விசாரித்து சட்டப்பூர்வமாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளார். இந்த நிலையில்  சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆதார் அர்ஜூனா தாக்கல் செய்துள்ள மனுவில், தன்னுடைய டுவிட்டர் பதிவை உடனடியாக நீக்கிவிட்டதாகவும் தனக்கு எந்த உள்நோக்கமும் இல்லை என்றும் எந்த ஒரு அடிப்படை முகாந்திரமும் இல்லாமல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், புகார் குறித்து காவல்துறை முழுமையாக கவனத்தைச் செலுத்தவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

தமிழக அரசின் நிலைமையை விமர்சிப்பது மட்டும் BNS சட்டத்தின் கீழ் எந்த குற்றமாகாது, என்றும், மாநிலத்தை கவிழ்க்க அல்லது இந்தியாவின் இறையாண்மை, ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டிற்கு ஆபத்தை விளைவிக்கும் எந்தவொரு சதித்திட்டத்திலும் தான்  ஈடுபடவில்லை, அல்லது உடந்தையாக தான் இருப்பதாக எந்த வகையிலும் தனது பதிவு  பிரதிபலிக்கவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார். ஆளும் ஆட்சியை விமர்சிப்பது எந்தவொரு கிரிமினல் குற்றத்திற்கும் சமமானதல்ல. அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். எனவே தன் மீதான வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார். வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார். இந்த வழக்கு நீதிபதி சதீஷ்குமார் முன்பு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.