ஏரியில் 18 வயது சிறுவன் சடலமாக மீட்பு! மதுபோதையால் நடந்த விபரீதம்
காஞ்சிபுரம் நத்தப்பேட்டை ஏரியில் 18 வயது சிறுவன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தில் காஞ்சிபுரம் தூலுகா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
காஞ்சிபுரம் நத்தப்பேட்டை ஏரியில் சடலம் ஒன்று மிதப்பதாக காஞ்சிபுரம் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை அலுவலகதிற்கு தகவல் வந்தது. உடனடியாக தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை அலுவலர்கள் காஞ்சிபுரம் நத்தப்பேட்டை ஏரி பகுதிக்கு சென்று ஏரியில் மிதந்து கொண்டிருந்த சடலத்தை மீட்டனர். மேலும் இதுகுறித்து காஞ்சிபுரம் தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், விசாரணையில் உயிரிழந்தவர் சின்ன காஞ்சிபுரம், அம்மங்கார தெரு பகுதியைச் சேர்ந்த சங்கரநாரயணன் (18) என்பது தெரியவந்தது. நேற்று சக நண்பர்களுடன் மது அருந்திய சங்கரநாராயணன் மது போதையில் ஏரியில் குளிக்கும் போது ஏரி நீரில் சிக்கி உயிரிழந்துள்ளார். சம்பவம் குறித்து காஞ்சிபுரம் தாலுக்கா போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.