திருப்பதி தரிசன விரக்தியால் கோயில் கட்டிய பக்தர்! 10 பேர் இறப்புக்கு காரணமான முதியவர்
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சாமி தரிசனம் செய்ய முடியாத விரக்தியால் சொந்த செலவில் ரூ.10 கோடியில் கட்டிய கோயிலில் திடிரென கூட்டம் வந்ததே 10 பேர் இறப்புக்கு காரணம் என்பது தெரியவந்தது.
ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் மாவட்டத்தைச் சேர்ந்த ஹரிமுகுந்த பாண்டா (94) பதின்மூன்று ஆண்டுகளுக்கு முன்பு திருப்பதி ஏழுமலையான் கோயிலிக்கு சாமி தரிசனத்திற்கு வந்தார். அப்போது கோவிந்த நாமத்தை உச்சரித்தபடி, சுவாமி தரிசனம் செய்ய மணிக்கணக்கில் காத்திருந்து கோயிலுக்குள் மூலவரை தரிசனம் செய்ய கருவறை அருகே சென்றபோது தனக்கு 75 வயதிற்கு மேல் ஆவதால் ஒரு நிமிடம் சாமியை நின்று தரிசனம் செய்து கொள்கிறேன் எனக் கூறினார். ஆனால் அந்த அங்கு பணியில் இருந்த பாதுகாப்புப் பணியாளர்கள் அவரை ஒதுக்கித் தள்ளினர். இதனால் அவர் விரக்தியுடன் வீடு திரும்பினர். தனக்கு நடந்த அனுபவத்தை தனது தாயாரிடம் பகிர்ந்து கொண்ட பிறகு, பெருமாளுக்கு கோயில் கட்ட முடிவு செய்தார்.
ஏற்கனவே ஹரிமுகுந்த பாண்டாவிற்கு காசிபுக்கா - பலாசா இரண்டு நகரத்தின் மையத்தில் அவர்களின் குடும்பத்திற்கு சுமார் நூறு ஏக்கர் நிலம் உள்ளது. எனவே தென்னந்தோட்டங்கள் மத்தியில் உள்ள 12 ஏக்கர் 40 சென்ட் பரப்பளவில் கோயில் கட்டினார். இதில் ஸ்ரீதேவி , பூதேவி தாயார்களுடன் பெருமாள் சிலைகள் ஒரே கல்லில் செதுக்கப்பட்டது. அத்துடன் நவக்கிரக தெய்வங்களுடன், அனைத்து தெய்வங்களின் சிலைகளும் இங்கு பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. இந்தநிலையில் நேற்று ஏகாதசி என்பதால் அதிக கூட்ட வந்ததால் கூட்ட நெரிசலில் சிக்கி 10 பேர் இறந்தனர். 31 பேர் காயமடைந்தனர். இந்த சம்பவம் குறித்து ஹரிமுகுந்த பாண்டா பேசுகையில் வழக்கமாக 2 ஆயிரம் முதல் 3 ஆயிரம் பக்தர்கள் வந்து வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்து செல்வார். ஆனால் இன்று திடிரென இவ்வளவு கூட்டம் வரும் என்று எனக்கு எப்படி தெரியும். இந்த கூட்டத்தில் 94 வயதில் நான் என்ன செய்ய முடியும். போலீசாருக்கோ யாருக்கும் முன்கூட்டியே கூட்டம் வரும் என்று நான் கூறவில்லை என்றார்