×

பிரேசில் மாடல் அழகிக்கு இந்திய வாக்காளர் பட்டியலில் இடம் கிடைத்தது எப்படி?- ராகுல்காந்தி

 

வாக்குத்திருட்டு என்பது ஒரு தேசவிரோத நடவடிக்கை என மக்களவையில் எம்பி ராகுல்காந்தி ஆவேசமாக பேசினார்.

மக்களவையில் உரையாற்றிய எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி, “ஜனநாயகத்தை சிதைப்பதற்காக தேர்தல் ஆணையத்தை மத்திய அரசு பயன்படுத்துகிறது.  சிபிஐ தலைவரை, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஏன் பரிந்துரைக்க கூடாது? தலைமைத் தேர்தல் ஆணையரை தேர்வு செய்யும் குழுவில் ஏன் தலைமை நீதிபதி இல்லை? தலைமை தேர்தல் ஆணையரை, பிரதமர் மோடியும், அமித்ஷாவும் தேர்வு செய்வது ஏன்? பிரதமரின் நேரத்தைப் பொறுத்து, தேர்தல் அட்டவணை அறிவிக்கப்படுகிறது.  வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தம் என்பது சட்டவிரோதமானது, அதை நிறுத்த வேண்டும். 150 கோடி மக்களின் வாக்குகளை சேர்த்து பின்னப்பட்ட துணி தான் நமது இந்தியா. வாக்குத்திருட்டு என்பது ஒரு தேசவிரோத நடவடிக்கை. ஹரியான சட்டப்பேரவை தேர்தலில் ஒரு பெண் பெயரில் 22 இடங்களில் வாக்குப்பதிவு நடந்தது எப்படி? பிரேசில் மாடல் அழகிக்கு இந்திய வாக்காளர் பட்டியலில் இடம் கிடைத்தது எப்படி? வாக்குச்சாவடிகளில் வைக்கப்பட்ட சிசிடிவி கேமராக்களில் உள்ள பதிவுகள் அழிக்கப்பட்டது ஏன்?

வாக்குச்சாவடி சிசிடிவி காட்சிகளை 45 நாட்களில் அழிக்க வேண்டும் என்ற சட்டம் கொண்டுவரப்பட்டது ஏன்? தலைமைத் தேர்தல் ஆணையரை தேர்வு செய்யும் குழுவில் இருந்து தலைமை நீதிபதியை நீக்கியது ஏன்? நீங்கள் ஓட்டை திருட வேண்டுமானால், அந்த அமைப்பை கைப்பற்ற வேண்டும். ஆர்.எஸ்.எஸ். சிந்தாந்தம் கொண்டோரை நியமித்து அனைத்து அமைப்புகளையும் பாஜக கைப்பற்றியுள்ளது. நான் சொல்லக் கூடியது கசப்பான உண்மைகள். எதிரணியில் இருக்கும் ஆளுங்கட்சியினரால் நிச்சயமாக ஏற்க முடியாது. பாஜக அரசு எல்லாவற்றையும் பேச மட்டுமே செய்கிறது. ஆனால் செயலில் ஒன்றுமில்லை. பாஜக சொல்லியபடியே தேர்தல் ஆணையம் செயல்படுகிறது. தேர்தல் ஆணையராக யார் வரவேண்டும் என்பதில் பிரதமர் மோடியும், உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் குறியாக உள்ளனர்.” என்றார்.