திருமணமான 6 மாதங்களில் பெண் மர்ம மரணம்! மாமியார் அடித்துக் கொன்றதாக பெண் வீட்டார் குற்றச்சாட்டு
செய்யாறு அருகே திருமணமான 6 மாதத்தில் புதுப்பெண்ணை அடித்து துக்கிலிட்ட கணவர் மாமியார் உள்ளிட்ட 5பேரை கைது செய்ய வலியுறுத்தி பெண்ணின் உறவினர்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அடுத்த ஆக்கூர் கிராமத்தைச் சார்ந்த கூலி தொழிலாளியான கங்கா என்பவரும் காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அருகே புத்தலி கிராமத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளி அமிர்தலட்சுமி என்பவரும் பணி புரியும் இடத்தில் பழகியுள்ளனர். இந்நிலையில் கங்கா தனது மகனுக்கு திருமணம் செய்து வைக்க அமிர்த லட்சுமியின் மகளை பெண் கேட்டுள்ளார். இருவரும் வெவ்வேறு சமூகத்தை சார்ந்தவர்கள். எனவே இரு குடும்பத்தின் பெரியோர்கள் முன்னிலையில் அமிர்தலட்சுமியின் மகள் ஜீவலட்சுமியை கங்காவின் மகன் ஜீவானந்தத்திற்கு கடந்த ஆறு மாதத்திற்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது.
இந்நிலையில் திருமணம் முடிந்த ஒரு சில மாதங்களிலேயே கணவன் மனைவி மற்றும் அவர்களது குடும்பத்தினர் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு கங்கா மற்றும் அவரது உறவினர்கள் ஜீவ லட்சுமியிடம் நீ மாற்று சமூகத்தை சேர்ந்தவர் என்பதால் உன் தாய் வீட்டிற்கு சென்று கல்யாண சீதனம் பெற்று வா என கூறியதாக தெரிகிறது. இதற்கு இடையே வரதட்சணை கொடுப்பதில் இரு குடும்பத்தாரும் பேசி சுமுகமான சூழலை ஏற்படுத்தி உள்ளனர். இருப்பினும் நேற்று மாலை ஜீவ லட்சுமியின் தாய் அமிர்த லட்சுமிக்கு ஆக்கூர் கிராமத்தில் இருந்து தொலைபேசி மூலம் உங்கள் மகளுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளதாக தொலைபேசியில் தெரிவித்துள்ளனர். உடனடியாக பெண்ணின் உறவினர்கள் ஆக்கூர் கிராமத்திற்கு விரைந்து சென்று பார்த்த போது வீட்டில் உள்ளே ஜீவ லட்சுமி சடலமாக கிடப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர். மேலும் ஜீவ லட்சுமியின் கணவர் மற்றும் அவரது உறவினர்கள் யாரும் வீட்டில் இல்லாததால் சந்தேகம் அடைந்த பெண்ணின் உறவினர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்து தனது மகன் உயிரிழப்பு சந்தேகம் மரணம் இருப்பதாக புகார் அளித்துள்ளனர். புகாரைத் தொடர்ந்து உயிரிழந்த ஜீவ லட்சுமி உடலை கைப்பற்றி செய்யாறு அரசு தலைமை மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இன்று காலை முதல் உயிரிழந்த ஜீவ லட்சுமியின் உறவினர்கள் அரசு மருத்துவமனை முன்பு தனது மகள் உயிரிழப்புக்கு காரணமான கணவர் மற்றும் அவரது உறவினர்களை கைது செய்தால் தான் உடலை பெற்றுக் கொள்வோம் என போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
நீண்ட நேரம் ஆகியும் உரியவர்கள் கைது செய்யாததை கண்டித்து பெண்ணின் உறவினர்கள் திடீரென செய்யாறு காஞ்சிபுரம் சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் செய்யாறு காஞ்சிபுரம் சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்து போலீஸ் வாகனத்தில் ஏற்ற முற்பட்டபோது போலீசாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் திடீர் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது. அதனை தொடர்ந்து போலீசார் உயிரிழந்த பெண்ணின் கணவரை கைது செய்துள்ளதாக செல்போனில் காண்பித்த பிறகு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். அதனை தொடர்ந்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததை அடுத்து உயிரிழந்த ஜீவ லட்சுமி உடலை பெற்றுச் சென்றனர் மேலும் சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தினார்களா அல்லது வேறு ஏதேனும் காரணமாய் என தீவிர விசாரணையில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.