அழகு முதல் ஆண்மை வரை… கற்றாழையின் டாப் பயன்கள்!

 

அழகு முதல் ஆண்மை வரை… கற்றாழையின் டாப் பயன்கள்!

நம் வீட்டிலேயே வளர்க்கக் கூடிய எளிய தாவரம் கற்றாழை. ஆரோக்கியம் முதல் அழகு வரை அது அள்ளித்தரும் பலன்கள் ஏராளம். வாரத்துக்கு 2-3 முறை கற்றாழையை உட்கொண்டு வந்தால் உடலில் ஏராளமான மாற்றங்கள் நிகழ்வதை உணர முடியும்.

அழகு முதல் ஆண்மை வரை… கற்றாழையின் டாப் பயன்கள்!

கற்றாழையை எப்படி தேர்வு செய்வது?

சோற்றுக் கற்றாழைதான் மிகச் சிறந்தது. இளம் இலைகளை எடுக்க வேண்டாம். முதிர்ச்சியடைந்த இலையை எடுக்க வேண்டும். இலையை கத்தரித்து அதிலிருந்து வடியும் பாலை முழுமையாக அகற்றிவிட வேண்டும். பிறகு குழாய் தண்ணீரில் ஏழு முறை மீண்டும் மீண்டும் கழுவ வேண்டும். இப்படி செய்வதன் மூலம் கசப்பு சுவை அகலும்.

எப்படி சாப்பிடலாம்…

கழுவிய கற்றாழையை சிறிது நாட்டு சர்க்கரை சேர்த்து அப்படியே சாப்பிடலாம். நுங்கு போல இருக்கும்.

மோரில் கற்றாழையைப் போட்டு நன்கு மிக்ஸியில் ஜூஸ் செய்து அருந்தலாம்.

கற்றாழையை மிக்ஸியில் நன்கு அரைத்து வெந்நீர் சேர்த்து அருந்தலாம். அப்படி அறைக்கும் போது எலுமிச்சை அல்லது இஞ்சி சேர்த்துக்கொள்ளலாம்.

பயன்கள்:

கற்றாழையில் 96 சதவிகிதம் நீர்ச்சத்து உள்ளது. இது சருமத்துக்கு நீர்ச்சத்தை கொடுத்து பாதுகாக்கிறது. இதில் வைட்டமின் ஏ, பி, சி, இ ஆகியவை நிறைவாக உள்ளது. மேலும், கோலைன், ஃபோலிக் அமிலம் ஆகியவையும் உள்ளது. இவை எல்லாம் சருமம் மீண்டும் கட்டமைக்கப்பட உதவியாக இருக்கின்றன.

கற்றாழையில் அத்தியாவசிய அமினோ அமிலங்களில் 20 வகைகள் உள்ளன. இவை உடலில் உள்ள தசைகள், எலும்பு திசுக்கள் மீண்டும் கட்டமைக்கப்பட உதவி செய்கின்றன.

செரிமானக் குறைபாட்டை நீக்குகிறது. இரிடபிள் பவுல் சிண்ட்ரோம் பிரச்னைக்கு தீர்வாக அமைகிறது. உடல் எடையைக் குறைக்கவும் உதவுகிறது.

மலச்சிக்கல் பிரச்னை உள்ளவர்கள் கற்றாழையை அடிக்கடி எடுத்துக்கொள்ள வேண்டும். இது மிகச்சிறந்த மலமிளக்கியாகவும் செயல்படுகிறது.

டைப் 2 சர்க்கரை நோய் உள்ளவர்கள் கற்றாழையை அடிக்கடி உட்கொள்ளலாம். இது ரத்தத்தில் சர்க்கரை அளவைக் குறைக்க உதவுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. எதிர்காலத்தில் சர்க்கரை நோய் சிகிச்சையில் கற்றாழை மிகப்பெரிய பங்களிப்பை வழங்கும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. சர்க்கரை நோய் உள்ளவர்கள் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தும் மாத்திரை மருந்து எடுத்துவிட்டு கற்றாழை சாறு அருந்த வேண்டாம்.

கற்றாழை உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற உதவுகிறது. உடலில் பி.எச் லெவல் கட்டுக்குள் இருக்க துணை செய்கிறது.

விந்தணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கச் செய்யும். நாட்டுச் சர்க்கரையுடன் சேர்த்துக் குடித்தால் மாதவிலக்கு தொடர்பான பிரச்னைகள் நீங்கும். குழந்தையின்மை பிரச்னை உள்ள ஆண், பெண் இருவரும் இதை தொடர்ந்து எடுத்து வருவது நல்லது.

இன்றைக்கு சந்தையில் உள்ள அழகு சாதனப் பொருட்களில் கற்றாழை மிகச் சிறிய அளவிலாவது சேர்க்கப்பட்டிருக்கும். அந்த அளவுக்கு அழகுக் கலை உலகம் கற்றாழையை நம்பியிருக்கிறது.

இரவில் கற்றாழை சாற்றுடன் பாதாம் எண்ணெய் கலந்து முகம், கழுத்துப் பகுதியில் தேய்த்துவிட்டு மறுநாள் காலையில் கழுவினால் முகம் பொலிவு பெறும்.

கற்றாழை சாறுடன் சிறிது ட் ட்ரீ எண்ணெய் விட்டு இரவு படுக்கச் செல்வதற்கு முன்பு பூசிக்கொண்டு படுத்து, காலையில் கழுவி வர வேண்டும். இப்படி செய்தால் எண்ணெய் பசை சருமத்தில் உள்ள எண்ணெய் பிசுக்கு பிரச்னை நீங்கும், முகப்பரு நீங்கும். கற்றாழையைத் தொடர்ந்து சருமத்தில் தடவியும், உள் மருந்தாக, உணவாக எடுத்து வந்தால் முதுமை தாமதம் ஆகும்.