உடல் பருமன் முதல் இதய பாதுகாப்பு வரை… நலம் தரும் அத்தி!

 

உடல் பருமன் முதல் இதய பாதுகாப்பு வரை… நலம் தரும் அத்தி!

நூற்றுக் கணக்கான சின்னஞ்சிறிய விதைகளால் நிரப்பப்பட்ட, பார்க்கக் கண்ணீர் துளி போல தோற்றம் கொண்ட சுவையான பழம் அத்தி. இயற்கை சர்க்கரை, தாது உப்புக்கள், ஊட்டச்சத்துக்கள், கரையக்கூடிய நார்ச்சத்து என அத்திப்பழம் மிகவும் பலன் தரக்கூடிய பழமாக உள்ளது.

ஒரு அத்தியில் (தோராயமாக 40 கிராம்) 30 கலோரி, 8 கிராம் கார்போஹைட்ரேட், ஒரு கிராம் நார்ச்சத்து, தினசரி தேவையான அளவில் 3 சதவிகிதம் தாமிரம், 2 சதவிகிதம் மக்னீஷியம் உள்ளது.

உடல் பருமன் முதல் இதய பாதுகாப்பு வரை… நலம் தரும் அத்தி!

மிகவும் குறைந்த கலோரி கொண்டது என்பதால் அத்தி மிகச்சிறந்த உணவு ஆகும். அதே நேரத்தில் உலர் அத்தியில் கலோரி அதிகம். எனவே, ஃபிரஷ் அத்தியை எடுத்துக்கொள்வது நல்லது.

அத்தியைச் சித்தா, ஆயுர்வேதம், கை வைத்தியத்தில் பயன்படுத்தி வருகின்றனர். செரிமானக் குறைபாட்டை நீக்கும் ஆற்றல் அத்திப் பழத்துக்கு உண்டு. இதில் அதிக அளவில் உள்ள நார்ச்சத்து செரிமானத்தைத் தூண்டுகிறது. மலச்சிக்கலை போக்குகிறது.

அத்திப்பழம் உடலில் உயர் ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தவும், ரத்த நாளங்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவுகிறது. இதில் அதிக அளவில் உள்ள பொட்டாசியம் ரத்த அழுத்தத்தைக் குறைக்கிறது. சர்க்கரை நோயாளிகள் அத்திப்பழத்தை எடுத்து வந்தால் அவர்களுக்கு இதயம் மற்றும் சிறுநீரக பிரச்னை வருவதற்கான வாய்ப்பு குறைவதாக ஆய்வுகள் கூறுகின்றன.

குழந்தையின்மையால் அவதிப்படும் தம்பதிகளை அத்திப்பழம் சாப்பிடச் சொல்லும் பழக்கம் நம் பாரம்பரிய மருத்துவத்தில் உள்ளது. பண்டைய கிரேக்க நாகரீகத்தில் அத்திப்பழம் புனிதமானதாகவும் பாலுணர்வு, காதல் மற்றும் கருவுறுதலின் அடையாளமாக அத்திப்பழம் பார்க்கப்பட்டது.

இதில் உள்ள துத்தநாகம், மாங்கனீசு, மக்னீசியம், இரும்புச் சத்துக்கள் இனப்பெருக்க மண்டலத்தின் செயல்திறனை மேம்படுத்த உதவுகின்றன. சினைப்பை நீர்க்கட்டியால் அவதியுறும் பெண்களுக்கு அத்திப்பழம் நிவாரணம் அளிக்கிறது.

உலர் அத்தியில் கால்சியம் அதிக அளவில் உள்ளது. இது எலும்புகள் உறுதியாக இருக்கத் துணை புரியும். இதில் இரும்புச்சத்து அதிகமாக உள்ளதால் ரத்த சோகை பிரச்னை வருவது தடுக்கப்படும். ரத்த சிவப்பணு உற்பத்தி அதிகரிக்கும்.

அத்திப் பழம் மட்டுமின்றி அதன் இலை உள்ளிட்டவையும் மருத்துவ பயன்கள் கொண்டது. அத்தி இலையைக் கொண்டு தேநீர் தயாரித்து உட்கொண்டால் இன்சுலின் தேவை குறைவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதன் மூலம் சர்க்கரை நோய் கட்டுக்குள் வரும்.

தினமும் இரண்டு பழங்கள் சாப்பிட்டு வந்தால் சருமம் இயற்கையாகவே பொலிவு பெறும்.