பெருந்துறையில் மழைநீர் சூழ்ந்த பகுதிகளில் அதிமுக எம்எல்ஏ ஜெயக்குமார் நேரில் ஆய்வு

 

பெருந்துறையில் மழைநீர் சூழ்ந்த பகுதிகளில் அதிமுக எம்எல்ஏ ஜெயக்குமார் நேரில் ஆய்வு

ஈரோடு

பெருந்துறை பழைய பேருந்து நிலைய வடிகால் மற்றும் சாலை பணிகளை 10 நாட்களுக்குள் முடிக்கும்படி அதிகாரிகளுக்கு, அதிமுக எம்எல்ஏ ஜெயக்குமார் கேட்டுகொண்டார்.

ஈரோடு மாவட்டம் பெருந்துறை பழைய பேருந்து நிலையம் பாதை தார் சாலை மற்றும் வடிகால் பணி முடிக்கப்படாததால் நேற்று முன்தினம் பெய்த கனமழையால் மார்க்கெட் கடைகள் மற்றும் வீடுகளுக்குள் மழைநீர் புகுந்தது. இதனை அடுத்து, அந்த பகுதிக்கு நேரில் ஆய்வுமேற்கொண்ட பெருந்துறை சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஜெயக்குமார், அங்குள்ள கடை உரிமையாளர்கள், பொதுமக்களிம் பாதிப்புகள் குறித்து கேட்டறிந்தார்.

அப்போது, பழைய பேருந்து நிலையம் முதல் போலீஸ் ஸ்டேஷன் ரவுண்டானா வரையிலான வடிகால் மற்றும் தார் சாலை அமைக்கும் பணி நீண்ட காலமாக மெதுவாக நடைபெற்று வருவதாகவும், தற்போது வடிகால் மூடிவைக்கப்பட்டதால், அங்கு பெய்த கனமழையால் கடைகளுக்குள் தண்ணீர் சூழ்ந்துகொண்டதாகவும் தெரிவித்தனர். மேலும், இந்த பணி நடக்கும் காலங்களில் கடைகள் திறக்கப்படாததால் பேரூராட்சி மூலம் வாடகை வசூல் செய்வதில் இருந்து விலக்கு அளிக்கவும், கோரிக்கை விடுத்தனர்.

பெருந்துறையில் மழைநீர் சூழ்ந்த பகுதிகளில் அதிமுக எம்எல்ஏ ஜெயக்குமார் நேரில் ஆய்வு

அப்போது, அங்கிருந்த நெடுஞ்சாலைத்துறை மற்றும் பேரூராட்சி அதிகாரிகளிடம் அடுத்த 10 நாட்களுக்குள் இந்த பணிகளை முடித்து, பொதுமக்கள் பயன்பாட்டுக்கு விட வேண்டும் எனவும், இந்த பணி நடைபெற்ற காலங்களில் இப்பகுதியில் உள்ள கடைகளுக்கு வாடகை வசூல் செய்யக்கூடாது எனவும் அதிகாரிகளிடம் கேட்டுக் கொண்டார். தொடர்ந்து, கருமாண்டி செல்லிபாளையம் பேரூராட்சிக்குட்பட்ட செட்டிதோப்பு பகுதியிலும், ஜீவா நகர் பகுதியிலும் ஆய்வு மேற்கொண்ட அவர், அங்கு தேங்கியுள்ள மழைநீரை விரைந்து வெளியேற்றும்படி அறிவுறுத்தினார்.

மேலும், பவானி சாலையில் உள்ள சுபாஷ் சந்திரபோஸ் வீதியில் மூடப்படாமல் உள்ள வடிகாலுக்கு காங்கிரீட் மூடி அமைக்குமாறு அதிகாரிகளைக் கேட்டுக் கொண்டார். இந்த ஆய்வின்போது, பெருந்துறை பேரூராட்சி அதிமுக செயலாளர் கல்யாணசுந்தரம், வேளாண் கூட்டுறவு வங்கி தலைவர் விஜயன் என்கிற ராமசாமி, துணை தலைவர் ஜெகதீஷ் மற்றும் பொதுமக்கள் உடனிருந்தனர்.