வீட்டில் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனை… அதிமுக பிரமுகர் கைது!

 

வீட்டில் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனை… அதிமுக பிரமுகர் கைது!

கோவை

கோவையில் வீட்டில் நூதன முறையில் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனை செய்து வந்த அதிமுக பிரமுகரை போலீசார் கைது செய்தனர்.

கோவை மாவட்டம் காமநாயக்கன் பாளையம் காவல் நிலைய போலீசார், நேற்று பொள்ளாச்சி சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, இருசக்கர வாகனத்தில் பிரஸ் என ஸ்டிக்கர் ஒட்டிய வாகனத்தை ஓட்டி வந்த நபரை சந்தேகத்தின் பேரில் நிறுத்தி சோதனையிட்டனர். அப்போது, இருசக்கர வாகனத்தில் 6 லிட்டர் கள்ளச் சாராயம் கடத்திச் சென்றது தெரியவந்தது. இதனையடுத்து,சாராயத்தை பறிமுதல் செய்த போலீசார் அவரை காவல் நிலையம் அழைத்துச்சென்று விசாரித்தனர்.

அப்போது, அவர் சுல்தான்பேட்டை அருகே உள்ள வதம்பச்சேரியை சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் சுந்தர்ராஜ் (36) என்பதும், இவர் அதிமுகவில் பேச்சாளராக உள்ளார் என்பதும் தெரிய வந்தது. மேலும், அவர் தனது வீட்டில் சாராயம் காய்ச்சி விற்பனை செய்து வருவதும் தெரிய வந்தது. இதனை அடுத்து, அவரை கைதுசெய்த போலீசார், அவரிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டனர்.

வீட்டில் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனை… அதிமுக பிரமுகர் கைது!

மேலும், காமநாயக்கன்பாளையம் போலீசார் தகவல் அளித்தன் பேரில், வதம்பச்சேரியில் உள்ள அவரது வீட்டில் சுல்தான் பேட்டை உதவி ஆய்வாளர் ரவி தலைமையிலான போலீசார் நேற்று சோதனை மேற்கொண்டனர். அப்போது, வீட்டில் 150 லிட்டர் சாராய ஊறல், 4 லிட்டர் கள்ளச்சாராயம் மற்றும் சாராயம் தயாரிப்பதற்கான மூலப் பொருட்களை ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். இதுகுறித்து, சுந்தரராஜின் தாயாரிடம் விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது, சுந்தரராஜ் கடந்த 1 மாத காலமாக வீட்டில் ஊறல் போட்டு குக்கரில் சாராயம் காய்ச்சுவதும், அதனை 100-க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களுக்கு சப்ளை செய்தது தெரிய வந்தது. மேலும், செல்போனில் தொடர்பு கொண்டால் வீட்டிற்கே சென்று டோர் டெலிவரி செய்வதும் தெரிய வந்தது. இதுகுறித்து சுந்தர்ராஜன் மீது தனியே வழக்குப்பதிவு செய்த சுல்தான்பேட்டை போலீசார், சாராய ஊறல்களைக் கைப்பற்றி அழித்தனர்.