• February
    24
    Monday

Main Area

Mainபாஜக அரசின் கீழ் பொதுத்துறை வங்கிகள் இரட்டை நிலைப்பாடு; விஜய் மல்லையா கடும் சாடல்!

விஜய் மல்லையா
விஜய் மல்லையா

லண்டன்: பாஜக ஆட்சியின் கீழ் பொதுத்துறை வங்கிகள் இரட்டை நிலைப்பாட்டை எடுப்பதாக தொழிலதிபர் விஜய் மல்லையா கடுமையாக சாடியுள்ளார்.

jet airways

ஜெட் ஏர்வேஸ் நிதி நெருக்கடி

கடந்த ஆண்டு வெள்ளி விழாவை கொண்டாடிய இந்திய விமான நிறுவனமான ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கி தவித்து வருகிறது. கடும் நெருக்கடி காரணமாக, அந்நிறுவனத்தின் நிறுவனரும், தலைவருமான நரேஷ் கோயல் மற்றும் அவரது மனைவி ஆகியோர் நிறுவனத்தின் இயக்குனர் குழுவில் இருந்து ராஜினமா செய்துள்ளனர்.

naresh goyal

நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள ஜெட் ஏர்வேஸ் விமான நிறுவனத்துக்கு பொதுத்துறை வங்கிகள் உதவ வேண்டும் என மத்திய அரசு கேட்டுக் கொண்டதற்கு இணங்க, அந்த நிறுவனத்துக்கு கடன் அளித்துள்ள பாரத ஸ்டேட் வங்கி அந்த நிறுவனத்தின் பொறுப்புக்களை ஏற்றுக் கொள்ள முன் வந்துள்ளது.

வங்கிகள் இரட்டை நிலைப்பாடு

இந்நிலையில், பாஜக ஆட்சியின் கீழ் பொதுத்துறை வங்கிகள் இரட்டை நிலைப்பாட்டை எடுப்பதாக தொழிலதிபர் விஜய் மல்லையா கடுமையாக சாடியுள்ளார். இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் ஜெட் ஏர்வேஸ் விமான நிறுவனத்தை காப்பாற்ற பொதுத்துறை வங்கிகள் முன்வந்துள்ளது மகிழ்ச்சியளிக்கிறது.

அதேபோன்று கிங்ஃபிஷர் நிறுவனத்துக்கு செய்திருக்கலாம். மத்திய பாஜக அரசின் கீழ் பொதுத்துறை வங்கிகள் இரட்டை நிலைப்பாட்டை எடுக்கின்றன என சாடியுள்ளார்.

kingfisher

கிங்ஃபிஷர் நிறுவனத்தை காப்பாற்றவும், ஊழியர்களின் நலனுக்காகவும் வங்கிகளில் ரூ.4000 கோடி தான் சேமிப்பு வைத்திருந்ததாக சுட்டிக் காட்டியுள்ள மல்லையா, அதை அங்கீகரிக்காமல் அனைத்து சாத்தியக்கூறுகளையும் ஆராய்ந்து கதவை அடைத்து விட்டனர். இதனால், தலை சிறந்த விமான நிறுவனம் அதன் சிறப்பு வாய்ந்த ஊழியர்களுடனான தொடர்பு துண்டிக்கப்படும் நிலைக்கு தள்ளப்பட்டதாக வேதனை தெரிவித்துள்ளார்.

ஆளுக்கு ஒரு நீதி

sbi

மத்திய பாஜக அரசின் கீழ் இரட்டை நிலைப்பாடு எடுக்கப்படுவதாக குற்றம் சாட்டியுள்ள விஜய் மல்லையா, நான் கடனாக வாங்கிய அசல் தொகை 100 சதவீதத்தையும் கர்நாடகா உயர் நீதிமன்றத்தின் முன்பு சமர்ப்பிக்கிறேன் என தொடர்ந்து கூறி வருகிறேன். மறுபடியும் இதனை நான் கூறுகிறேன். ஆனால், வங்கிகள் நான் திரும்பச் செலுத்துவதாக கூறும் பணத்தை ஏற்க மறுப்பது ஏன் என கேள்வி எழுப்பியுள்ளார்.

சரிந்த மல்லையா சாம்ராஜ்யம்

யுனைடெட் ப்ரீவரீஸ் குழுமத்தின்கீழ் கிங்ஃபிஷர் ஏர்லைன்ஸ், கிங்ஃபிஷர் மதுபான ஆலை உள்ளிட்ட பல்வேறு தொழில்களை விஜய் மல்லையா நடத்தி வந்தார். இந்த நிலையில், பாரத ஸ்டேட் வங்கி உள்பட 17 கடன்தாரர்களிடம் கடந்த 2010-ஆம் ஆண்டு ரூ.6,900 கோடியை கிங்ஃபிஷர் நிறுவனம் கடனாகப் பெற்றது. அதனையடுத்து, தொழில் நஷ்டம் ஏற்பட்டதாகக் கூறி கிங்ஃபிஷர் நிறுவனம் தனது விமானச் சேவைகளை கடந்த 2013-ஆம் ஆண்டில் நிறுத்தியது. மேலும், வங்கிகளிடம் பெற்ற கடனையும் அந்நிறுவனம் திருப்பிச் செலுத்தவில்லை.

vijay mallya

இதனைத் தொடர்ந்து, விஜய் மல்லையா மற்றும் அவரது கிங்ஃபிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனம், அதன் தாய் நிறுவனமான யுனைடெட் ப்ரீவரீஸ் குழுமம் ஆகியவற்றை 'வேண்டுமென்றே பணத்தை திருப்பிச் செலுத்தத் தவறிய மோசடியாளர்கள்' என்ற பட்டியலின் கீழ் இணைத்து எஸ்பிஐ நிறுவனம் அறிவித்தது.

இதனிடையே, இந்திய வங்கிகள் பலவற்றிலும் ரூ.9 ஆயிரம் கோடிக்கும் மேல் கடன் வாங்கி திருப்பிச் செலுத்தாத வழக்கில் தேடப்பட்டு வரும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட விஜய் மல்லையா நாட்டை விட்டு தப்பிச் சென்றார்.

கடந்த 2016-ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் லண்டனில் வசித்து வரும் அவரை, இந்தியா கொண்டு வரும் முயற்சியில் மத்திய அரசு தீவிரமாக செயல்பட்டு வந்த நிலையில், விஜய் மல்லையாவை இந்தியாவுக்கு நாடு கடத்த இங்கிலாந்து உள்துறை அமைச்சகம் அனுமதி வழங்கியது.ஆனால், அதனை எதிர்த்து அவர் மேல்முறையீடு செய்துள்ளதால் அவரை நாடு கடத்துவதில் இழுபறி நீடித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் வாசிங்க

மாத்திரை போட்டுக்கொண்டு நயன்தாரா படம் பாருங்கள்: ராதா ரவியை கிண்டல் செய்த சமந்தா!

2018 TopTamilNews. All rights reserved.