35 லட்சம் மக்கள் எஸ்கேப்; காலியாகும் அட்வான்ஸ் தொகை – கொலையில் முடிந்த வாடகை பிரச்னை

 

35 லட்சம் மக்கள் எஸ்கேப்; காலியாகும் அட்வான்ஸ் தொகை – கொலையில் முடிந்த வாடகை பிரச்னை

சென்னையில் வாடகை கேட்ட வீட்டின் உரிமையாளர் குணசேகரனை இளைஞர் அஜித் கொலை செய்துள்ளார். இந்தச் சம்பவத்துக்கு பின்னணியில் என்ன நடந்தது என்பதை ஆராய வேண்டும். தமிழக அரசும் நீதிமன்றமும் கொரோனா காலக்கட்டத்தில் ஊரடங்கு காரணமாக ஏராளமானவர்கள் வாழ்வாதாரத்தை இழந்துவிட்டனர். பலர் வேலையை இழந்து வருமானமின்றி தவித்துவருகின்றனர். அதனால் இஎம்ஐ செலுத்த சலுகை வழங்கப்பட்டது. வாடகை வீட்டிலிருப்பவர்களிடம் வீட்டின் உரிமையாளர்கள் மனிதநேயத்துடன் நடந்து கொள்ள வேண்டும் என தமிழக அரசு தெரிவித்தது. இதுதொடர்பான வழக்கும் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்தச் சமயத்தில் வீட்டு வாடகை கேட்டு நச்சரித்த குன்றத்தூரைச் சேர்ந்த குணசேரகன் என்ற வங்கி ஊழியர் கொலை செய்யப்பட்டார்.

இளைஞர் அஜித்

இந்தச் சம்பவத்தில் என்ன நடந்தது என்பதை ஆராய்ந்து பார்த்தால் உண்மைகள் தெரியும். திருவல்லிக்கேணி பகுதியில் குடியிருந்த குணசேகரன், வங்கியில் வேலைப்பார்த்தார். பின்னர், விருப்ப ஓய்வு பெற்றுவிட்டு வீட்டில் இருந்துவருகிறார். குன்றத்தூர் பண்டார தெருவில் வீடு கட்டியுள்ளார். அதில் ஒரு பகுதியை அஜித் என்பவருக்கு கடந்த ஒன்றரை ஆண்டுக்கு முன் வாடகைக்கு விட்டுள்ளார். மாதம் 4,000 ரூபாய் வாடகை. ஊரடங்கு முன்பு வரை அஜித்துக்கு வாடகை கொடுப்பதில் எந்தவித சிக்கலும் இல்லை. அஜித், கிடைத்தவேலைகளைப் பார்த்து தன்னுடைய அம்மா, 2 சகோதரிகளை காப்பாற்றி வந்தார்.

35 லட்சம் மக்கள் எஸ்கேப்; காலியாகும் அட்வான்ஸ் தொகை – கொலையில் முடிந்த வாடகை பிரச்னை

ஊரடங்கு காரணமாக அஜித்துக்கு வருமானம் இல்லை. அதனால் 4 மாதங்களாக வாடகை கொடுக்கவில்லை. அடிக்கடி குணசேகரனும் வாடகை கேட்டுப்பார்த்தார். ஆனால் அஜித் குடும்பம் வாடகை கொடுக்கவில்லை. அதனால் வீட்டின் உரிமையாளர் என்ற அதிகாரத்தை கையில் எடுத்த குணசேகரன், வீட்டின் மின்இணைப்பை முதலில் துண்டித்தார். அதில் தண்ணீர் என அடுத்தடுத்து பிரச்னைகளை கொடுத்தபோதிலும் அஜித் குடும்பத்தால் வாடகையை கொடுக்க முடியவில்லை. அதனால், ஆத்திரமடைந்த குணசேகரன், வாடகை கொடுத்தால் வீட்டிலிருங்கள். நீங்கள் கொடுத்த அட்வான்ஸ் தொகையும் காலியாகிவிட்டது. எனவே வீட்டை காலி செய்துவிடுங்கள். இல்லையென்றால் நான் வீட்டிலிருக்கும் பொருள்களை வெளியில் தூக்கி போட வேண்டியதிருக்கும் என்று கூறியுள்ளார்.

வீட்டு வாடகை

அப்போது அஜித்தின் அம்மா, 2 பொம்பள பிள்ளைகளை வைத்திருக்கிறேன். இப்படி வீட்டை காலி பண்ண சொன்னால் எங்கே போவோம் என்று கேட்டுள்ளார். இருவருக்கும் வாய்தகராறு முற்றியுள்ளது. அப்போது குணசேகரனின் அநாகரீகமாக பேசிய வார்த்தைகளால் அவமானத்தில் அஜித்தின் குடும்பம் கூனிகுறுகியுள்ளது. வீட்டின் உரிமையாளர்க்கும் அஜித் அம்மாவுக்கும் நடந்த சண்டையை ஊரே வேடிக்கை பார்த்துள்ளது. அதனால் அஜித் அம்மா, வீட்டை பூட்டி விட்டு தன்னுடைய 2 மகள்களையும் அழைத்துக் கொண்டு உறவினர் வீட்டுக்குச் சென்றுவிட்டார். கஞ்சா போதையில் நள்ளிரவில் வீட்டுக்கு வந்துள்ளார் அஜித். வீடு பூட்டியிருப்பதைப் பார்த்து அவரின் அம்மாவுக்கு போன் செய்துள்ளார். அப்போது அஜித் அம்மா கண்ணீர் மல்க நடந்த சம்பவத்தைக் கூறியுள்ளார். ஏற்கெனவே, போதையிலிருந்த அஜித்துக்கு அம்மா கூறிய வார்த்தைகள் விஷமாக தலைக்கெறியது. அதுவும் தன்னுடைய அம்மாவையும் சகோதரிகளையும் அநாகரிகமாக வீட்டின் உரிமையாளர் பேசியுள்ளார் என்றதும் அந்த நடுராத்திரியில் குணசேகரனின் வீட்டின்கதவை தட்டியுள்ளார் அஜித்.

35 லட்சம் மக்கள் எஸ்கேப்; காலியாகும் அட்வான்ஸ் தொகை – கொலையில் முடிந்த வாடகை பிரச்னை

கொலை

தூக்க கலக்கத்தில் எழுந்து வந்து கதவைத்திறந்த குணசேகரன், வெளியில் அஜித் நின்று கொண்டிருப்பதை பார்த்து என்ன சாவியை கொடுக்க வந்துட்டீயா இல்ல வாடகை கொண்டு வந்திருக்கீயா என்று நக்கலாக கேட்டுள்ளார். ஏற்கெனவே கொலை வெறியில் இருந்த அஜித்துக்கு இந்த வார்த்தைகள் மேலும் ஆத்திரத்தை ஏற்படுத்தியது. அதனால் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து குணசேகரனை சரமாரியாக குத்தியுள்ளார். அதோடு இனி வாடகை கேட்பாயா என்று கூறியபடி அவரின் கழுத்தை அறுத்துள்ளார். அஜித்தின் பிடியிலிருந்து தப்பிய குணசேகரன், தெரு வழியாக ஓடியுள்ளார். நள்ளிரவு நேரம் என்பதால் தெருவில் யாருமில்லை. அதனால் குணசேகரனின் அலறல் யாருக்கும் கேட்கவில்லை.

35 லட்சம் மக்கள் எஸ்கேப்; காலியாகும் அட்வான்ஸ் தொகை – கொலையில் முடிந்த வாடகை பிரச்னை

 

உயிரைக் காப்பாற்றிக் கொள்ள தெருவில் ஓடிய குணசேகரனை விடாமல் விரட்டிய அஜித், அவரைக் கொலை செய்து விட்டு தப்பினார். அதிகாலை நேரத்தில் ரத்தக்கறை படிந்த சட்டையுடன் வில்லிவாக்கம் பகுதியில் நடந்துச் சென்ற அஜித்தை போலீசார் பிடித்து குன்றத்தூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். வீட்டு வாடகைத் தகராறில் ஹவுஸ் ஓனர் கொலை செய்யபட்ட சம்பவம் உண்மையிலேயே பல ஓனர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தக் கொலை வழக்கில் கைதான அஜித், சிறை கம்பிகளை எண்ணிக் கொண்டிருக்கிறார். கொலையில் முடிந்ததால் இந்தச் சம்பவம் வெளியில் தெரியவந்தது. ஆனால் பல இடங்களில் வீட்டு வாடகை கொடுக்காதவர்கள் ஹவுஸ் ஓனர்களின் டார்ச்சர்களால் சொல்ல முடியாத தொல்லைகளை அனுபவித்து வருகின்றனர். அட்வான்ஸ் தொகை இருக்கும் வரை ஹவுஸ் ஓனர்கள் அமைதியாக இருப்பார்கள். வேலை இல்லை, வருமானம் இல்லை, வாடகை கொடுக்க பணம் இல்லை போன்ற காரணங்களுக்காக சென்னையிலிருந்து சொந்த ஊர்களுக்கு 35 லட்சத்துக்கு மேற்பட்டவர்கள் சென்றுவிட்டதாக தகவல்கள் உள்ளன. அதனால் தற்போது சென்னையில் பல வாடகை வீடுகள் காலியாகவே உள்ளன. அதனால் TO LET போர்டுகள் வீடுகள் முன்பும் வணிக வளாகங்கள் முன்பும் தொங்க விட்டிருப்பதைக் காணலாம்.

கண் கலங்க வைத்த கரூர் சம்பவம்

கரூர் மாவட்டம், வெள்ளியணை அருகே உள்ள மணவாடி பெரியார்நகர் காலனியை சேர்ந்த கூலித்தொழிலாளி நாகராஜன். மனைவி மற்றும் 2 குழந்தைகளுடன் வாடகை வீட்டில் குடியிருந்து வந்தார். ஊரடங்கால் வேலையை இழந்த நாகராஜனால் வாடகை கொடுக்க முடியவில்லை. அதனால் கடந்த மே மாதத்தில் வாடகை வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டார். அதனால் மணவாடி அருகே நாகராஜன், வீட்டிலிருந்த பொருட்கள் மற்றும் மனைவி, குழந்தைகளுடன் கரூர்-வெள்ளியணை சாலை ஓரத்தில் அமர்ந்திருந்த காட்சி அவ்வழியாக சென்றவர்களின் கண்களை கலங்க வைத்தது. இந்தத் தகவல் வெள்ளியணை போலீசாருக்கு தெரிந்ததும் நாகராஜனின் வீட்டின் உரிமையாளரிடம் பேச்சுவார்த்தை நடத்தி மீண்டும் அதே வீட்டில் அவர் குடியமர்த்தப்பட்டார். கட்டாயப்படுத்தி வாடகை கேட்கும் ஹவுஸ் ஓனர்கள் மீது பாதிக்கப்படும் வாடகைதாரர்கள் காவல் நிலையத்தில் புகாரளிக்கலாம். ஆனால் சொற்ப எண்ணிக்கையில்தான் வீட்டு வாடகை பிரச்னை தொடர்பாக காவல் நிலைய படியேறியுள்ளன.

35 லட்சம் மக்கள் எஸ்கேப்; காலியாகும் அட்வான்ஸ் தொகை – கொலையில் முடிந்த வாடகை பிரச்னை

தமிழகத்தைத் தொடர்ந்து மகாராஷ்டிர மாநில அரசும் ஹவுஸ் ஓனர்களுக்கு ஒர் அன்பான வேண்டுகோளை விடுத்துள்ளது. மூன்று மாதங்களுக்கு வீட்டு வாடகை வாங்க வேண்டாம் என்றும், வீட்டு வாடகை செலுத்தாதவர்களை வீட்டை விட்டு வெளியேறக்கூடாது என்றும் அறிவித்துள்ளது. அதையும் மீறி வீட்டு வாடகையை கட்டாயப்படுத்தினால் அல்லது வீட்டை காலி செய்ய சொன்னால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளது.

எந்தப் பறவைகளும் தன்னுடைய கூடுகளை வாடகைக்கு விடுவதில்லை ஆனால் மனிதன் மட்டும்தான் வாடகைக்கு விட்டு பணம் சம்பாதிக்கிறான். அது பிசினஸாக இருந்தாலும் இந்த ஊரடங்கு நேரத்தில் குறைந்தபட்ச மனித நேயத்தோடு வாழலாமே!

-எஸ்.செல்வம்