குடும்ப பிரச்னை காரணமாக ரிஷிவந்தியத்தை சேர்ந்த நடிகர் விஜய்யின் ரசிகர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
தமிழ் திரையுலகில் ரஜினி, கமலைத் தொடர்ந்து முன்னணி நாயகனாக இருந்து வரும் நடிகர் விஜய்க்கு ரசிகர்கள் பட்டாளம் ஏராளம். இவர் நடித்துள்ள மாஸ்டர் படம் இன்னும் வெளியாகவில்லை. மக்களை கொரோனா அச்சுறுத்தி வருவதால் திரையரங்குகள் இன்னும் திறக்கப்படவில்லை. இதனால், மாஸ்டர் எப்போது ரிலீஸ் ஆகும் என்று விஜய்யின் ரசிகர்கள் ஏக்கத்தில் இருக்கின்றனர்.
இந்த நிலையில், நடிகர் விஜய்யின் ரசிகர் பாலா விஜய் என்பவர் திடீரென தற்கொலை செய்து கொண்டுள்ளார். இவர் கடைசியாக ஆகஸ்ட் 11-ஆம் தேதி தனது ட்விட்டர் பக்கத்தில், காலை வணக்கம் என் தளபதி சொந்தங்களே என்று பதிவிட்டுள்ளார். பின்னர், கண்ணுல இருந்து தண்ணி அதுவா வருது உள்ள எவ்ளோ வலி இருக்குனு அப்போதான் எனக்கே தெரியுது … கடைசில நானும் இப்புடி புலம்ப ஆரமிச்சிட்டேன். ஒரு மனுஷன் எவ்ளோ வலிதான் தாங்குவான் என் வாழ்க்கை full ஆ இழப்புகள் மட்டும்தான் இருக்கு . ஒவ்வுரு தடவையும் அந்த வலியோட overcome பண்ணி வந்துட்டுத்தான் இருக்கேன். ஆனா இப்போ உனக்கு சந்தோஷமே கிடையாதுடான்னு கடவுள் நெனச்சிட்டான் போல என்று வேதனையுடன் பதிவு செய்துள்ளார். அதே நாளில் கடைசி ட்வீட்டாக விஜய் குறித்து உருக்கமாக பதிவிட்டுள்ளார். அதில் “தலைவன் படம் பார்க்காமலே போறேன். தலைவனையும் பார்க்காமலே போறேன்” என்று கண்ணீர் விடும் எமோஜியுடன் பதிவிட்டுள்ளார். அந்த ட்வீட்டில் நடிகர் விஜய்யை டேக் செய்து லவ் யூ தலைவா என குறிப்பிட்டுள்ளார்.
தற்கொலை செய்து கொண்ட பாலா (21)வுக்கு சொந்தமான ஊர் ரிஷிவந்தியம். குடும்பத்தினருடன் ஏற்பட்ட பிரச்னை காரணமாக மன அழுத்தத்தில் இருந்துள்ளார். ரசிகர் பாலா தற்கொலை செய்து கொண்டதையடுத்து #RIPBala என்ற ஹேஷ்டேக்கை விஜய் ரசிகர்கள் டிரெண்ட் செய்து வருகின்றனர்.