“சுற்றுச்சூழலை காக்க நம் மெளனம் கலைப்போம் ” : நடிகர் சூர்யா ட்வீட்

 

“சுற்றுச்சூழலை காக்க நம் மெளனம் கலைப்போம் ” : நடிகர் சூர்யா ட்வீட்

மத்திய அரசு EIA எனும் புதிய திட்டத்திற்கான வரைவு அறிக்கையை வெளியிட்டுள்ளது. இதனால் விவசாயமும் இயற்கை வளங்களும் பெரிதும் பாதிக்கப்படும் என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கருத்துத் தெரிவித்து வருகின்றனர். நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு கொண்டு வந்திருக்கும் புதிய சூழலியல் தாக்க மதிப்பீடு 2020 ஆம் ஆண்டு வரைவு சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு எதிரானது எனப் பலரும் சமூக ஊடகங்களில் கருத்தாகவும் வீடியோவாகவும் பதிவிட்டு வருகின்றனர். இதனால் #TNRejectsEIA2020, #ScrapEIA ஆகிய ஹேஷ்டேக்குகள் இந்திய அளவில் டிரெண்டாகி எல்லோரின் கவனத்தை ஈர்த்து வருகின்றன.

“சுற்றுச்சூழலை காக்க நம் மெளனம் கலைப்போம் ” : நடிகர் சூர்யா ட்வீட்

இந்நிலையில் இதுகுறித்து நடிகர் சூர்யா தனது டிவிட்டர் பக்கத்தில், ” பேசிய வார்த்தைகளை விட, பேசாத மௌனம் மிக ஆபத்தானது. காக்க.. காக்க.. சுற்றுச்சூழல் காக்க.. நம் மௌனம் கலைப்போம்..” என்று பதிவிட்டு விரிவான அறிக்கை ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், “நாட்டிற்கான முன்னேற்றங்கள் தேவை என்பதில் நமக்கு எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. ஆனால் கொரோனா என்னும் அரக்கன் பிடியில் நாம் அனைவரும் சிக்கி மீள போராடிக் கொண்டிருக்கும் இந்த வேளையில் நம்முடைய வாழ்வாதாரத்தையும் முக்கியமாக நமது வரும் சந்ததியினரின் வாழ்வையும் நிர்ணயிக்கக் கூடிய சக்தி உள்ள இந்த சட்டத்தை எதற்காக இவ்வளவு அவசரமாக நிறைவேற்ற வேண்டும்?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

“இந்த வரைவு அறிக்கையில் சாதக பாதக அம்சங்களை அனைத்து தரப்பு மக்களிடமும் கொண்டு சேர்த்து பொதுவாக மத்திய அரசின் கவனத்திற்கு கொண்டு செல்ல நமக்கு கிடைத்திருக்கும் கடைசி வாய்ப்பை நாம் நிச்சயமாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக சூர்யாவின் தம்பியும் நடிகருமான கார்த்தி, “சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு விதிகள் 2020’ வரைவு நம் இந்திய நாட்டின் சுற்றுச்சூழலுக்கு மேலும் அச்சுறுத்தலாக அமைந்திருப்பதாகவே தோன்றுகிறது” என்று அறிக்கை வெளியிட்டது கவனிக்கத்தக்கது.