மகாசக்தியாக அம்பாள் உருவெடுத்த ஆடிப்பூர திருநாள் சிறப்பு!

பெரும்பாலான சிவாலயங்களில் சுக்கிரவார அம்மன் இருப்பது போலவே ஆடிப்பூர அம்மன் விக்கிரகமும் இருக்கும். சிவாலயங்களில் மட்டுமின்றி வைஷ்ண திருக்கோயில்களிலும் ஆடிப்பூர விழா கொடி ஏற்றத்துடன் அமர்க்களமாக நடைபெறுவது வழக்கம். ஆடிப்பூர விழா ஆடி மாதத்திலே பூர நட்சத்திரத்தன்று கொண்டாடப்படும் தேவிக்குரிய  திருநாள். இந்த நாளில் தான் உமாதேவியும் தோன்றியதாக புராணங்கள் பேசுகின்றன. உலக மக்களை காக்கும் மகாசக்தியாக அம்பாள் உருவெடுத்த நாளாக ஆடிப்பூர திருநாள் கொண்டாடப்படுகிறது. சித்தர்களும், யோகிகளும் ரிஷிகளும் முனிவர்களும் திடசிந்தையுடன் சங்கல்பம் ஏற்று இந்த நாளில் தவத்தை துவக்குவதாக புராணங்கள் கூறுகின்றன.

பூத்தவளே புவனம் பதினான்கையும் பூத்தவண்ணம்
காத்தவளே பின் கரந்தவளே கறைகண்டனுக்கு
மூத்தவளே என்றும் மூவா முகுந்தற்கு இளையவளே
மாத்தவளே உன்னை அன்றி மற்றோர் தெய்வம் வந்திப்பதே – என்று பாடுவார் அபிராமிபட்டர்.

அனைத்து உலகத்தையும் படைத்தும் காத்தும் கரந்தும் விளையாடும் அகிலாண்ட கோடி பிரம்மாண்ட நாயகியான அன்னைக்கு மஞ்சள் காப்பு, சந்தனக்காப்பு,  குங்குமக்காப்பு, நடத்துவது போல் வளை காப்பு நடக்கும் நாள் தான் ஆடிப்பூரம். அன்னை உளம் மகிழ்ந்து மாந்தர்கள் அனைவருக்கும் தன் அருளை வழங்கும் நாள். பல்வேறு விதங்களில் அன்னையைக் கொண்டாடும் நாள்  ஆடிப்பூரம்.

ஆடி மாதம் என்பது தக்ஷிணாயன காலத்தின் தொடக்க காலம். இது வரை வடக்கு நோக்கி நகர்ந்து கொண்டிருந்த சூரியன் தனது தெற்கு  நோக்கிய பயணத்தை தொடங்கும் மாதம். நம்முடைய ஒரு ஆண்டு தேவர்களுக்கு ஒரு நாள். அவர்களது இரவுக்காலமே இந்த  தக்ஷிணாயன காலம் ஆகும். உத்தராயணக்காலம் சிவபெருமானை வழிபட உகந்தது என்றால் தக்ஷிணாயனம் அவரது வாம பாகத்தில்  வீற்றிருக்கும் அம்பிகைக்கு உரிய காலம் ஆகும். அம்மனுக்கு உகந்த ஆடி மாதம், நவராத்திரி ஆகிய பண்டிகைகள் வரும் காலம். இந்த ஆடி மாதத்தில் வெள்ளி, செவ்வாய், ஞாயிறுகளில் அன்னையை வழிபட எல்லா  நலன்களும் தந்து அருளுவாள். சிறப்புகள் பல கொண்ட ஆடி மாதத்தில் பூர நட்சத்திர நாள் அம்பிகைக்கு மிகவும்  உகந்த நாள்.

வாலமதி நுதல்காட்ட, வதனம் செந்தா
மறைகாட்ட, வரைகாட்ட வளர்ந்த கொங்கை
நீலமலர் விழிகாட்ட, இமைய மென்னும்
நெடுங்கிரியில் உதித்தறங்கள் நிகழ்த்தி யாவும்
ஞாலமெலாம் பெற்றெடுத்தும் கன்னியாகி
நவிலுமறை நாதனிடம் நயந்து நிற்கும்
பாலினையின் னமுதை யருந்தேனை யாழைப்
பழித்தமொழி உமைபாதம் பணிதல் செய்வாம். – என்று பாடுவார் திருவிளையாடல் புராணம் பாடிய பரஞ்சோதி முனிவர். அதில் கவனிக்க வேண்டிய வரி ” ஞாலமெலாம் பெற்றெடுத்தும் கன்னியாகி ” என்ற வரிகள்.
அன்னையாய்  இருந்தும் கன்னி என்று மறைகள் பேசும் அம்பிகைக்கு நாம் வளைகாப்பு நடத்தி கண்டு களித்திடும் நாள் ஆடிப்பூரம். மாலை நேரங்களில்  அன்னைக்கு வளையல்களால் சிறப்பு அலங்காரம் செய்து வழிபட்டுவது அந்த வளையள்கள் பெண்மபக்தர்களுக்கு பிரசாதமாக  வழங்கப்படுவதும் வழக்கம்.

எல்லா ஆலயங்களிலும் அம்மனுக்கு வளைகாப்பு நடைபெறும் என்றாலும் திருநெல்வேலி காந்திமதியம்மனுக்கு, ஆடிப்பூர விழாவின் 4 – ம் நாளன்று, ஊஞ்சல் மண்டபத்தில்  நடக்கும் வளைகாப்பு விழா பிரசித்தி பெற்ற ஒன்று. அப்போது பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும் வளையலை வாங்கி  அணியும் பெண்களுக்கு விரைவில் வளைகாப்பு நடக்கும் என்பது நம்பிக்கை.

சில ஆலயங்களில் ஆடிப்பூரம் முளைப்பாலிகை திருவிழாவாக கொண்டாடப்படுகின்றன. அவரவர் வீடுகளில் நவதான்யங்களை விதைத்து முளைப்பாலிகையை தயார் செய்து ஆடிப்பூரத்தன்று அம்மன்  சன்னதிக்கு எடுத்துவருகின்றனர் . முளை வளர்ந்துள்ள விதத்தைக் கொண்டு அவ்வாண்டு எவ்வளவு செழிப்பாக இருக்கும் என்பதை கணிப்பது பழக்கம்.

பல ஆலயங்களில் ஆடிப்பூரம் அம்மனுக்குரிய பிரம்மோற்சவமாக பத்து நாள் திருவிழாவாக வாகன சேவை, வீதியுலாவுடன் சிறப்பாக  நடைபெறுகிறது. அவற்றுள் சென்னை மயிலாப்பூர் கற்பகாம்பாள், மதுரை மீனாட்சி , சிதம்பரம் சிவகாமி , காஞ்சிபுரம் காமாட்சி , திருகடையூர் அபிராமி, திருவாரூர் கமலாம்பாள், நாகப்பட்டிணம் நீலாயதாட்சி, திருக்கருகாவூர் கர்ப்பரட்சாம்பிகை, ஆடிப்பூர திருநாள் புகழ்பெற்றவை ஆனாலும் ஆடிப்பூரத்தன்று அம்பிகைக்கு சிறப்பு வழிபாடு நடக்காத கோவிலே இல்லை.

கொரானா தடுப்பு நடவடிக்கையாக திருகோயில்களில் நடைபெறும் விழாக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருப்பதால், பல ஆலய விழாக்கள் தொலைக்காட்சி, இணையதளங்களில் நேரடி ஒலிபரப்படுகிறது . அச்சம் நீங்கி ஆலயம் திறக்க ஆடிப்பூரத்தில் அன்னையை பிரார்த்திப்போம் அருள் பெறுவோம்.

-மு.ரா.சுந்தரமூர்த்தி

Most Popular

கன்னியாகுமரியில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 5,533 ஆக உயர்வு!

தமிழகத்தில் கொரோனாபாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. நேற்று ஒரேநாளில் தமிழகம் வந்தவர்கள் உட்பட 5,063பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2,68,285 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த...

வேலூரில் மேலும் 206 பேருக்கு கொரோனா : பாதிப்பு எண்ணிக்கை 6,805 ஆக உயர்வு!

தமிழகத்தில் கொரோனாபாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. நேற்று ஒரேநாளில் தமிழகம் வந்தவர்கள் உட்பட 5,063பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2,68,285 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த...

புதுக்கோட்டையில் மேலும் 140 பேருக்கு கொரோனா : விழுப்புரத்தில் பாதிப்பு எண்ணிக்கை 4,238ஆக அதிகரிப்பு !

தமிழகத்தில் கொரோனாபாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. நேற்று ஒரேநாளில் தமிழகம் வந்தவர்கள் உட்பட 5,063பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2,68,285 ஆக அதிகரித்துள்ளது. இந்நிலையில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின்...

அயோத்தியில் ராமர் கோவில் பூமி பூஜை இன்று கோலாகலமாக நடக்கவுள்ளது. இந்த நேரத்தில் ராம பிரான் குறித்த சிந்தனை சில !

மகா விஷ்ணு எடுத்த 10 அவதாரங்களில் அதிக ஆகர்ஷம் மிக்கது ராமாவதாரம் . பிற அவதாரங்களை விட ராமருக்கு அதிக அளவில் ஆலயங்கள் கட்டப்பட்டுள்ளன . எல்லா ஊர்களில் கிராமங்கள் நகரங்கள் என்ற...