போலி முகவரி கொடுத்து கொரோனா டெஸ்ட்… ஆதாரை கட்டாயமாக்கிய ராஜஸ்தான் அரசு

 

போலி முகவரி கொடுத்து கொரோனா டெஸ்ட்… ஆதாரை கட்டாயமாக்கிய ராஜஸ்தான் அரசு

போலியான முகவரியைக் கொடுத்து கொரோனா பரிசோதனை மேற்கொள்வதைத் தவிர்க்க ராஜஸ்தானில் ஆதார் அட்டை இருந்தால் மட்டுமே கொரோனா பரிசோதனை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா பரவல் நாடு முழுவதும் தீவிரமாகிக் கொண்டே செல்கிறது. இந்த நிலையில் கொரோனா பரிசோதனைக்கு வரும் பலரும் தங்கள் உண்மையான வீட்டு முகவரியைக் கொடுப்பது இல்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது. இதனால், கொரோனா உறுதியானால் அவர்களைத் தேடி செல்லும்போது குறிப்பிட்ட அந்த முகவரியில் அந்த நபர் இருப்பது இல்லை என்று மருத்துவப் பணியாளர்கள் திருப்பி வருகின்றனர். தங்களுக்கு கொரோனா உள்ளது என்றால் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுவிடுவார்களோ என்று பயந்து பலரும் தலைமறைவாகிவிடுகின்றனர். இதனால் கொரோனா பரவல் அதிகரிக்கும் ஆபத்து உள்ளது

இந்த நிலையில் ராஜஸ்தான் மாநிலம் கொரோனா பரிசோதனைக்கு புதிய வழிகாட்டுதலை வெளியிட்டுள்ளது. அதன்படி, கொரோனா பரிசோதனைக்கு வருபவர் தன்னுடைய ஆதார் கார்டை காட்டுவது அவசியம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பரிசோதனை செய்ய வந்த நபருக்கு ஆதார் அட்டை இல்லை என்றால், குடும்பத்தில் ஆதார் அட்டை வைத்துள்ள வேறு யாருடைய ஆதாரையாவது காட்டி பரிசோதனை செய்துகொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், குழந்தைக்கு ஆதார் அட்டை இல்லை, அதனால் பரிசோதனை மறுக்கப்பட்டுவிட்டது என்ற குற்றச்சாட்டு எழுவது தவிர்க்கப்பட்டுள்ளது.

அதே போல் மாதிரி எடுத்த 24 மணி நேரத்துக்குள் முடிவுகளை ஆய்வுக்கூடங்கள் வழங்க வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தற்போது ஒரு நாளைக்கு 40 ஆயிரம் மாதிரிகளை பரிசோதிக்கும் அளவுக்கு ராஜஸ்தானில் வசதி உள்ளது. அங்கு 34 ஆயிரம் பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. இதில் 24,547 பேர் நலம் பெற்று வீடு திரும்பிவிட்டனர். 9,029 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.