ஶ்ரீராமரிடம் தானம் பெற்று தவப் பயன் இழந்த முனிவர்!

 

ஶ்ரீராமரிடம் தானம் பெற்று தவப் பயன் இழந்த முனிவர்!

இன்றைக்கு யாரும் தங்களுடைய பாவங்கள் போக்க என்று தானம் செய்வது இல்லை. தோஷம் நீங்க, மனத்திருப்திக்காக தானம் வழங்குகின்றனர். இருப்பினும் தானம் வாங்குவதன் மூலம் நாம் ஒருவரின் பாவங்களை ஏற்றுக்கொள்கிறோம் என்று புராணக் கதைகள் சொல்கின்றன. ஶ்ரீராமரிடம் தானம் பெற்று தன்னுடைய தவப் பலன்களை இழந்த முனிவர் பற்றித் தெரிந்துகொள்வோம்.

ஶ்ரீராமரிடம் தானம் பெற்று தவப் பயன் இழந்த முனிவர்!

அயோத்தியில் சிங்கார முனிவர் என்று ஒருவர் வசித்து வந்தார். உலக காரியங்கள் மீது நாட்டம் கொள்ளாமல் தவத்திலேயே இருந்து வந்தார். இதனால், அவருடைய வீட்டில் வறுமை தாண்டவமாடியது. இந்த நிலையில்தான் ஶ்ரீராமர் வனவாசம் முடிந்து அயோத்தி திரும்பினார். பட்டாபிஷேகத்துக்கு முன்பாக ராமாயணப் போரில் நேர்ந்த பாவங்களைப் போக்க தானம் வழங்கும்படி வசிஷ்ட முனிவர் கூறினார். இதைத் தொடர்ந்து பல வித தானங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. யுத்த பாவத்தைப் போக்க எள் தானம் வழங்கப்படுவதாக இருந்தது. இந்த எள் தானத்தைப் பெற யாரும் முன்வரவில்லை. இதனால் ஶ்ரீராமர் வருந்தினார்.

எள் தானம் பெற யாரும் தயாராக இல்லாத நிலையில், எள் தானம் பெறுபவர்களுக்கு தங்கக் கட்டிகள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அப்போதும் கூட யாரும் அதை வாங்க முன்வரவில்லை. இந்த நிலையில்தான் நம்முடைய சிங்கார முனிவரின் மனைவி சொர்ணவல்லியின் காதில் எள் தானம் பெற்றால் தங்கக் கட்டிகள் கிடைக்கும் என்ற தகவல் விழுந்தது. தங்கக் கட்டிகள் மட்டும் கிடைத்தால் குடும்பத்தில் உள்ள கஷ்டம் நீங்கிவிடும் என்று கருதினார். இதனால், சிங்கார முனிவரிடம் சென்று எள் தானம் பெற்றுக்கொள்ளும்படி கூறினார்.

மனைவியின் பேச்சைக் கேட்டு கோபத்தின் உச்சிக்கே சென்றார் முனிவர். இத்தனை ஆண்டுகள் நான் பெற்ற தவப் பயன் அனைத்தையும் சாதாரண தங்கத்துக்காக இழக்கச் சொல்கிறாயா என்று கோபம் கொண்டார். உடன் அவருடைய மனைவி சொர்ணவல்லி, “உங்களுக்கு பாவம் வந்து சேர நான் நினைப்பேனா. தானம் கொடுப்பது யார்? ஶ்ரீராமர் திருமாலின் அவதாரம். தானம் பெற்றதும் ஶ்ரீராமரின் முகத்தைக் கவனித்தால் எல்லா பாவமும் போய்விடும். உங்கள் தவப் பயனுக்கு எந்த பாதிப்பும் வராது. நம் குடும்ப கஷ்டமும் நீங்கும்” என்றார்.

இதை ஏற்றுக் கொண்ட சிங்கார முனிவர், எள் தானம் பெறத் தயாராக இருப்பதாக அரண்மனைக்குத் தகவல் அனுப்பினார். யாரும் தானம் பெறாத சூழலில் சிங்கார முனிவர் மட்டும் எப்படி ஒப்புக்கொண்டார் என்ற கேள்வி வசிஷ்டருக்கு எழுந்தது. தன்னுடைய தவ முயற்சியால் சிங்கார முனிவரின் எண்ணத்தை அறிந்தார் வசிஷ்டர்.

தானம் கொடுக்கும் நாள் வந்தது. எள் தானம் செய்ததும், தங்கக் கட்டிகள் முனிவருக்கு வழங்கப்பட்டது. அப்போது ராமரின் முகத்தைப் பார்க்கச் சிங்கார முனிவர் தலையை உயர்த்திய நேரத்தில் ராமருக்கும் முனிவருக்கும் இடையே திரை ஒன்று விழுந்தது. இதனால் தவப் பயன் இழந்து ஏமாற்றம் அடைந்தார் சிங்கார முனிவர்.

வீட்டுக்கு வந்து நடந்ததை மனைவியிடம் கூறி வேதனையடைந்தார். உடன் அவருக்கு ஆறுதல் கூறிய சொர்ணவல்லி, பட்டாபிஷேகம் முடிந்ததும் ராமர் நகர்வலம் வருவார். அப்போது அவரைக் காணலாம் என்று நம்பிக்கை அளித்தார்.

அதன் படியே பட்டாபிஷேகம் முடிந்ததும் நகர்வலத்துக்கு வந்தார் ராமர். அப்போது சிங்கார முனிவர் ஓடோடிச் சென்று ஶ்ரீராமரை தரித்தார். ராமரும் முனிவரைப் புன்னகையுடன் பார்த்து, “முனிவரே உமது பாவங்கள் எல்லாம் இந்த நொடியே உம்மைவிட்டு விலகி, உமது வாழ்வு சிறக்கும்” என்றார். ஶ்ரீராமர் சொன்ன நேரத்தில் சிங்கார முனிவரைப் பிடித்திருந்த பாவங்கள் நீங்கின.

இனி தானம் வாங்கும் முன்பு கொஞ்சம் யோசிப்பது நல்லது. சின்ன விஷயத்துக்கு ஆசைப்பட்டால் நம்மிடம் உள்ளதும் போய்விடும் என்று புராணக் கதைகள் நமக்கு சொல்லிக் கொடுக்கின்றன. இந்த கதை வால்மீகி ராமாயணத்தில் இடம்பெற்றுள்ளது!