கிருஷ்ணகிரி அருகே அம்மன் சிலை மீது படமெடுத்து ஆடிய நாகம்!

 

கிருஷ்ணகிரி அருகே அம்மன் சிலை மீது படமெடுத்து ஆடிய நாகம்!

கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே அம்மன் சிலை மீது நாகப்பாம்பு படமெடுத்து ஆடிய நிகழ்வு, பக்தர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தி உள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே உள்ள வேலம்பட்டியில் வேங்கானூர் செல்லும் சாலையில் பொன்னியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோயிலில் செவ்வாய், வெள்ளிக் கிழமைகளில் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறுவது வழக்கம். இந்த நிலையில், கடந்த திங்கள் கிழமை மாலை கோவிலில் உள்ள அம்மன் சிலை மீது திடீரென நாகப்பாம்பு ஒன்று ஏறியது.

கிருஷ்ணகிரி அருகே அம்மன் சிலை மீது படமெடுத்து ஆடிய நாகம்!

இதனை கண்டு கோவிலுக்கு வந்த பக்தர்கள், சுற்றுவட்டார பகுதி மக்களுக்கு தகவல் அளித்தனர். இதனால், அம்மன் சிலை மீது பாம்பு ஏறிய காட்சியை காண நூற்றுக்கணக்கானோர் கோயிலில் திரண்டனர். அம்மன் சிலை மீது ஏறிய அந்த நாக பாம்பு சுமார் 1 மணி நேரம் சிலையிலேயே படமெடுத்து ஆடியபடி இருந்தது. இதனை பொதுமக்கள் பக்தி பரவசத்துடன் கண்டு களித்தனர்.

பின்னர், அந்த பாம்பு சிலையில் இருந்து இறங்கி புதரில் சென்று மறைந்தது. இதனை தொடர்ந்து, பொன்னியம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. இதனிடையே, பாம்பு அம்மன் சிலையில் ஏறிய காட்சியை ஏராளமானோர் தங்களுடைய செல்போனில் படம் எடுத்து, சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.