’தூதன் வருவான் கோல் மழை பொழியும்’ – அட்டகாசமான கோல் அடித்த ஈஸ்ட் பெங்காலின் ’பிரைட்’

 

’தூதன் வருவான் கோல் மழை பொழியும்’ – அட்டகாசமான கோல் அடித்த ஈஸ்ட் பெங்காலின் ’பிரைட்’

கோவா அணிக்கு எதிரான ஐஎஸ்எல் லீக் போட்டியில் ஐந்து டிபெண்டர்களைத் தாண்டி பந்தை லாவகமாக எடுத்துச் சென்று கோல் அடித்து ஈஸ்ட் பெங்கால் வீரர் பிரைட் ஏனோபகாரே கால்பந்து ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார்.

நடப்பாண்டுக்கான ஐஎஸ்எல் கால்பந்து போட்டி கோவாவில் நடைபெற்றுவருகிறது. இந்தாண்டின் புதிய அணியான ஈஸ்ட் பெங்கால் தாமதமாக லீக்குக்குள் நுழைந்ததால் அவர்களால் சிறப்பாக வீரர்களை ஏலத்தில் எடுக்க முடியவில்லை. மற்ற அணிகள் கழித்துப் போட்ட வீரர்களை வேறு வழியில்லாமல் ஈஸ்ட் பெங்கால் ஏலத்தில் எடுத்தது.

’தூதன் வருவான் கோல் மழை பொழியும்’ – அட்டகாசமான கோல் அடித்த ஈஸ்ட் பெங்காலின் ’பிரைட்’

ஏலத்தின்போதே அந்த அணியால் லீக்கில் ஆதிக்கம் செலுத்த முடியாது என்ற பேச்சு எழுந்துவந்தது. அதைப்போலவே சரியான ஸ்டிரைக்கர் இல்லாததால் கோல் அடிக்க முடியாமல் லீக் போட்டிகளில் திணறிக் கொண்டிருந்தது.

இவ்வேளையில்தான் ஜனவரியில் டிரான்ஸ்பர் விண்டோவில் நைஜீரிய வீரர் பிரைட் ஏனோபகாரேவை (22) அணி நிர்வாகம் ஒப்பந்தம் செய்தது. ஐஎஸ்எல் லீக்கின் அறிமுக தொடரிலேயே கோல் அடித்து அணிக்கு முதல் வெற்றியையும் தேடித் தந்தார். தன்னை நம்பி ஒப்பந்தம் செய்த அணியின் நம்பிக்கையை அவர் பொய்த்துப் போகச் செய்யவில்லை.

நேற்று முன்தினம் கோவாவுக்கு எதிரான போட்டியில் அவர் அடித்த அற்புதமான கோல் தான் இப்போதைய ஹாட் டாபிக். இந்தக் கோலால் அனைத்துக் கால்பந்து ரசிகர்களின் பார்வையையும் தன் பக்கம் திருப்பியுள்ளார்.

’தூதன் வருவான் கோல் மழை பொழியும்’ – அட்டகாசமான கோல் அடித்த ஈஸ்ட் பெங்காலின் ’பிரைட்’

இந்தாண்டில் மிகவும் வலுவான அணியாக கோவா இருக்கிறது. டிபெண்ஷிங், மிட் பீல்ட், அட்டாக்கிங் என அனைத்து ஏரியாவிலும் ஃபெர்பக்ட்டான ஆட்களைக் கொண்டிருக்கிறது. புள்ளிப் பட்டியலிலும் மூன்றாவது இடத்தில் இருக்கிறது. இத்தகைய வலுவான அணியை எதிர்த்துக் களமிறங்கியது ஈஸ்ட் பெங்கால்.

வழக்கம் போல பிற்பாதி வரை கோல் இல்லாமலையே ஆட்டம் மந்தமாக நகர்ந்தது. இச்சூழலில் கோவா வீரர் அடித்த பந்தை ஈஸ்ட் பெங்கால் கோல்கீப்பர் மஜும்தார் கிளிரேன்ஸ் செய்தார். பந்து நேராக லெப்ட் விங்கரான மகோமாவுக்குச் சென்றது. அவர் பந்தை பிரைட்டிடம் பாஸ் போட்டார். பந்தை வாங்கிய காலோடு கோல் போஸ்ட்டை நோக்கி விரைந்தார் பிரைட்.

’தூதன் வருவான் கோல் மழை பொழியும்’ – அட்டகாசமான கோல் அடித்த ஈஸ்ட் பெங்காலின் ’பிரைட்’

விடுவார்களா கோவா டிபெண்டர்கள். ஆரம்பத்தில் ரெபெல்லோ டேக்கிள் செய்ய முற்படும்போது, அவரைச் சமாளித்து முன்னேறினார் பிரைட். அடுத்து டோலிங் ஸ்லைடிங் டேக்கிள் செய்ய, அவரையும் வீழ்த்தி அட்டாக்கிங் பாக்ஸுக்குள் நுழைந்தார்.

பந்தைப் பிடுங்கிவிட வேண்டும் என்ற நோக்கில் வேகமாக வந்த கொன்சாலசுக்கும் டிமிக்கு கொடுத்து பெனால்டி ஏரியாவுக்குள் நுழைந்தார். கடைசி வாய்ப்பாக காமா ஸ்லைடிங் டேக்கிள் செய்ய, அவரை லெப்ட் காலில் டீல் செய்து கோல் கீப்பர் நவாசை தாண்டி பந்தை இறுதியாக கோல் போஸ்டுக்குள் அனுப்பினார்.

மைதானத்தில் ரசிகர்கள் மட்டும் இருந்திருந்தால் நேரில் கண்டு வியந்துபோயிருப்பார்கள். வர்ணனையாளர்கள் அனைவரும் வாயடைத்துப் போகும் அளவிற்கு அற்புதமான கோலை அடித்து செலிபிரேட் செய்யக் கிளம்பினார் பிரைட். கன்னத்தில் ஒற்றிக்கொள்ளும்படியான கோல் அடித்த பிரைட்டை சமூக வலைதளங்களில் கால்பந்து ரசிகர்கள் கொண்டாடிவருகின்றனர். ஈஸ்ட் பெங்காலுக்கு தூதன் வந்துவிட்டான்… கோல் மழை பொழிகிறது!

இருப்பினும் துரதிருஷ்டவசமாக அடுத்த இரண்டு நிமிடத்திலேயே கோவா கோல் அடித்து ஆட்டத்தைச் சமன் செய்தது.