டைபாய்டு காய்ச்சலால் தவித்த மகள்: பேய் பிடித்ததாக நம்பிய தந்தையால் நேர்ந்த விபரீதம்!

 

டைபாய்டு காய்ச்சலால் தவித்த மகள்: பேய் பிடித்ததாக நம்பிய தந்தையால் நேர்ந்த விபரீதம்!

ராமநாதபுரம் மாவட்டம் கோரவள்ளி கிராமத்தில் வசித்து வருபவர் செல்வம். இவரது மனைவி கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு தற்கொலை செய்து கொண்ட நிலையில், இவர் தனது மகன் கோபிநாத் மற்றும் மகள் தாரணியுடன் வசித்து வந்தார். தாரணி மூன்றாம் ஆண்டு கல்லூரி படித்து வந்திருக்கிறார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு இவரது வீட்டில் வளர்க்கப்பட்டு வந்த நாய், ஆடு, மாடு உள்ளிட்டவை உயிரிழந்துள்ளது.

உயிரிழந்த செல்வத்தின் மனைவி தான் இதற்கு காரணம் என அப்பகுதி மக்கள் சொல்லவே, அதை நம்பிய செல்வம் பேய் ஓட்டும் பூசாரி ஒருவரிடம் சென்று பூஜை செய்து இருக்கிறார். இதனிடையே, செல்வத்தின் மனைவி உடல் அடக்கம் செய்யப்பட்ட இடத்திற்கு சென்று வந்ததிலிருந்து தாரணிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. தாரணிக்கு பேய் பிடித்திருப்பதாக எண்ணிய செல்வம், அவரை பூசாரியிடம் அழைத்துச் சென்றுள்ளார். அங்கு பூசாரி சாட்டை, பிரம்பால் தாரணியை அடித்ததால் அவர் அங்கேயே மயங்கி விழுந்துள்ளார்.

டைபாய்டு காய்ச்சலால் தவித்த மகள்: பேய் பிடித்ததாக நம்பிய தந்தையால் நேர்ந்த விபரீதம்!

பதற்றமடைந்த பூசாரி உடனே தாரணியை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுமாறு அறிவுறுத்தி இருக்கிறார். அதன்படி அப்பகுதியில் இருந்த தனியார் மருத்துவமனைக்கு தாரணி அழைத்துச் செல்லப்பட்ட நிலையில், அவருக்கு டைபாய்டு காய்ச்சல் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க ஒத்துழைக்காத செல்வம், பூசாரியிடம் அழைத்து சென்றால் உடல் நலம் சரியாகி விடும் என கூறி மருத்துவமனையிலிருந்து தாரணியை வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார்.

அன்று நள்ளிரவு தாரணி மீண்டும் கடுமையான காய்ச்சல் ஏற்படவே, அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். அங்கு தாரணியை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். பேய் பிடித்திருப்பதாக எண்ணி டைபாய்டு காய்ச்சலுக்கு உரிய சிகிச்சை அளிக்காததால் இளம்பெண் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.