மனைவி டெலிவரிக்கு சென்றிருந்த நேரத்தில் 2 பெண்களை ரகசிய திருமணம் செய்த நபர் கைது

 

மனைவி டெலிவரிக்கு சென்றிருந்த நேரத்தில் 2 பெண்களை ரகசிய திருமணம் செய்த நபர் கைது

கரூரில், மனைவிக்கு தெரியாமல் அடுத்தடுத்து 7 ஆண்டுகளில் இரண்டு திருமணம் செய்த தனியார் வங்கி ஊழியரை போலீசார் கைது செய்துள்ளனர்.

மனைவி டெலிவரிக்கு சென்றிருந்த நேரத்தில் 2 பெண்களை ரகசிய திருமணம் செய்த நபர் கைது

கரூர் வெங்கமேடு விவிஜி நகரில் வசித்து வருபவர் பிரபு (35), பி.காம் பட்டதாரியான இவர், கரூர், மற்றும் அரவக்குறிச்சி பகுதியில் தனியார் வங்கியில் காசாளராக பணியாற்றி வருகிறார். இவருக்கும், பொள்ளாச்சியை சேர்ந்த ஜோதி முருகேஸ்வரி (30) என்பவருக்கும் கடந்த 30-01-12- ல் திருமணம் நடந்துள்ளது. இருவரும் சந்தோஷமாக ஒரு வருடம் வாழ்ந்துள்ளனர். இந்நிலையில், கர்ப்பமான ஜோதிமுருகேஸ்வரி தாயார் வீடான பொள்ளாச்சிக்கு பிரசவத்திற்கு சென்று விட்டார்.

கடந்த 2013 ஆம் ஆண்டு ஜனவரி ஒன்றாம் தேதி ஆண் குழந்தை பிறந்த நிலையில் 3 மாதம் கழித்து குழந்தையுடன் கரூர் வந்துள்ளார் ஜோதி முருகேஸ்வரி. அப்போது, கணவரின் நடவடிக்கையில் மாற்றம் இருந்துள்ளது. விசாரித்து பார்த்த போது, தனியார் வங்கியில் உடன் வேலை பார்த்து வந்த நித்யா என்ற பெண்ணை திருமணம் செய்தது தெரியவந்தது. இதனால், ஜோதி கோபித்துக் கொண்டு மீண்டும் தாய் வீட்டிற்கு சென்று விட்டார். பணத்துக்காகவும், சொகுசாக வாழவும் ஆசைப்பட்டு 2- வது திருமணம் செய்து கொண்டதாக தெரிய வந்துள்ளது.

இதையடுத்து விவகாரத்து கேட்டு பொள்ளாச்சி காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வருகிறது. இந்த நிலையில், இரண்டாவது மனைவியை தொடர்ந்து, மூன்றாவதாக கரூர் தாந்தோன்றிமலையை சேர்ந்த சுதா என்ற பெண்ணை பிரபு திருமணம் செய்துள்ளார்.

இந்த தகவல் அறிந்து ஆத்திரமடைந்த முதல் மனைவி ஜோதிமுருகேஸ்வரி கரூர் மகளிர் காவல் நிலையத்தில் பிரபு, அவரது தாய், தந்தை, சகோதரிகள் மற்றும் இரண்டாவது மனைவி நித்யா ஆகியோரின் மீது புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் கரூர் அனைத்து மகளிர் போலீசார் மேற்கொண்ட விசாரணையில் மனைவியை ஏமாற்றி 2 திருமணம் செய்தது தெரியவந்தது. இதனையடுத்து வங்கி ஊழியர் பிரபுவை போலீசார் கைது செய்துள்ளனர்.