40 ஆண்டுகளுக்கு பிறகு தனது குடும்பத்தினருடன் இணைந்த 93 வயது பாட்டி – பொதுமுடக்கத்தால் நிகழ்ந்த நன்மை

 

40 ஆண்டுகளுக்கு பிறகு தனது குடும்பத்தினருடன் இணைந்த 93 வயது பாட்டி – பொதுமுடக்கத்தால் நிகழ்ந்த நன்மை

போபால்: 93 வயது பாட்டி ஒருவர் 40 ஆண்டுகளுக்கு பிறகு தனது குடும்பத்தினருடன் இணைந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

மத்தியப் பிரதேசத்தின் தமோ மாவட்டத்தின் கோட்டா தலா கிராமத்தைச் சேர்ந்தவர் பஞ்சுபாய் (வயது 93). அவருக்கு 53 வயது இருந்தபோது ஒரு தேனீ தாக்குதலில் இருந்து அவரை நூர்கான் என்பவர் காப்பாற்றினார். இதையடுத்து தனது குடும்பத்தை விட்டு பிரிந்த பஞ்சுபாய், 1980-களில் இருந்து நூர்கானின் முஸ்லீம் குடும்பத்துடனே வாழத் தொடங்கி விட்டார். பஞ்சுபாய் தாய் மொழியான மராத்தி அந்த கிராமத்தினருக்கு புரியவில்லை. இதனால் கடந்த 40 ஆண்டுகளாக பஞ்சுபாய் அந்த கிராமத்திலேயே தங்கி உள்ளூர் மக்களுடன் பிணைப்பை வளர்த்துக் கொண்டார்.

பஞ்சுபாயை காப்பாற்றிய நூர்கான் கடந்த 2007-ஆம் ஆண்டு இறந்து விட்டார். இந்நிலையில், கொரோனா பரவலை கட்டுப்படுத்த பிறப்பிக்கப்பட்ட பொதுமுடக்கத்தை தொடர்ந்து கடந்த மே 3 அன்று நூர்கானின் மகன் இஸ்ரார் பஞ்சுபாய் அருகில் அமர்ந்து மொபைலில் ஏதோ பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது பஞ்சுபாய் மராத்தியில் ஏதோ முணுமுணுத்துக் கொண்டிருந்தார். இதையடுத்து பஞ்சுபாயிடம் கடந்த காலத்தைப் பற்றியும், அவளுடைய கிராமத்தின் பெயரைப் பற்றியும் இஸ்ரார் கேட்டார். அப்போது பஞ்சுபாய் “கஞ்சனாமா”, “பாத்ரோட்” என்று முணுமுணுத்தார்.

இதைத் தொடர்ந்து அந்த வார்த்தைகளை பற்றி இஸ்ரார் கூகுளில் தேடினார். இதன் பயனாக பஞ்சுபாயின் சொந்த ஊர் பாத்ரோட் என்பதை இஸ்ரார் தெரிந்து கொண்டார். உடனே அந்த ஊரைச் சேர்ந்த ஒருவரை தொடர்பு கொண்டு இஸ்ரார் விசாரித்தார். மேலும் பஞ்சுபாயின் புகைப்படங்களையும் வாட்ஸ்அப் மூலம் அனுப்பி வைத்தார். இதனால் அடுத்த சில மணி நேரங்களில் பஞ்சுபாயின் குடும்பத்தினரை எளிதில் கண்டுபிடிக்க முடிந்தது.

இந்நிலையில், பஞ்சுபாயின் பேரன் பிருத்வ்குமார் ஷிங்கிள் நாக்பூருக்கு தனது பாட்டியை அழைத்துச் செல்ல காரில் தமோ மாவட்டத்துக்கு வந்தார். இங்கு ஆச்சர்யமான ஒரு விஷயம் என்னவென்றால் பஞ்சுபாய் காணாமல் போனபோது அவரது பேரன் பிருத்வ்குமார் பிறக்க கூட இல்லை என்பதாகும். பஞ்சுபாயை அவரது குடும்பத்தினருடன் வழியனுப்ப ஏராளமான ஆண்கள், பெண்கள் என அந்த கிராமத்தை சேர்ந்தவர்கள் கூடினர். அவர்களில் சிலர் பஞ்சுபாயின் பிரிவை தாங்க முடியாமல் கண்ணீர் விட்டு அழுதனர். இதைத் தொடர்ந்து பஞ்சுபாயை நாக்பூருக்கு அவரது பேரன் காரில் அழைத்துச் சென்றார். அங்கிருந்த கிராமவாசிகள் பஞ்சுபாய்க்கு பிரியாவிடை கொடுத்து வழியனுப்பினர்.