90 நாளில் வட்டி வாயிலாக மட்டுமே ரூ.4,537 கோடி சம்பாதித்த பஜாஜ் பைனான்ஸ்…..

 

90 நாளில் வட்டி வாயிலாக மட்டுமே ரூ.4,537 கோடி சம்பாதித்த பஜாஜ் பைனான்ஸ்…..

பஜாஜ் பைனான்ஸ் நிறுவனம் கடந்த டிசம்பர் காலாண்டில் நிகர வட்டி வருவாயாக ரூ.4,537 கோடி ஈட்டியுள்ளது.

மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்கள் இந்த நிதியாண்டின் 3வது காலாண்டுக்கான (2019 அக்டோபர்-டிசம்பர்) நிதிநிலை முடிவுகளை வெளியிட்டு வருகின்றன. அந்த வகையில் மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் கணக்கிட உதவும் 30 நிறுவனங்களில் ஒன்றான பஜாஜ் பைனான்ஸ் நேற்று தனது டிசம்பர் காலாண்டு நிதிநிலை முடிவுகளை வெளியிட்டது.

லாபம்

கடந்த டிசம்பர் காலாண்டில் பஜாஜ் பைனான்ஸ் நிறுவனம் ஒட்டு மொத்த அளவில் நிகர லாபமாக ரூ.1,614 கோடி ஈட்டியுள்ளது. இது சென்ற நிதியாண்டின் இதே காலாண்டைக் காட்டிலும் (2018 அக்டோபர்-டிசம்பர்) 52 சதவீதம் அதிகமாகும். 2018 டிசம்பர் காலாண்டில் பஜாஜ் பைனான்ஸ் நிறுவனம் ஒட்டு மொத்த அளவில் நிகர லாபமாக ரூ1,060 கோடி மட்டுமே ஈட்டியிருந்தது.

வட்டி வருவாய்

2019 டிசம்பர் காலாண்டில் பஜாஜ் பைனான்ஸ் நிறுவனம் நிகர வட்டி வருவாயாக ரூ.4,537 கோடியாக உயர்ந்துள்ளது. இது 2018 டிசம்பர் காலாண்டைக் காட்டிலும் 42 சதவீதம் அதிகமாகும். அந்த காலாண்டில் பஜாஜ் பைனான்ஸ் நிறுவனத்தின் நிகர வட்டி வருவாய் ரூ.3,206 கோடியாக இருந்தது. பஜாஜ் பைனான்ஸ் நிறுவனத்தின் கடந்த டிசம்பர் காலாண்டு நிதிநிலை முடிவுகள் சிறப்பாக இருந்ததன் எதிரொலியாக இன்று அந்நிறுவன பங்கின் விலை 4.95 சதவீதம் உயர்ந்து ரூ.4,421.75 ஆக அதிகரித்தது.