பழைய டயர்களை கொண்டு தயாரிக்கப்பட்ட கொசு பொறி! 9 வயது சிறுமியின் அருமையான படைப்பு

 

பழைய டயர்களை கொண்டு தயாரிக்கப்பட்ட கொசு பொறி! 9 வயது சிறுமியின் அருமையான படைப்பு

தமிழகத்தை சேர்ந்த 9 வயது சிறுமி ஒருவர் பழைய டயர்களை கொண்டு வீட்டில் பயன்படுத்தக்கூடிய செலவு குறைவான கொசுப்பொறி ஒன்றை தயாரித்துள்ளார்.

Image

எலிப்பொறியை பார்த்திருப்போம் இது என்ன கொசு பொறி என சிந்திப்பது உண்டு. ஆம் கொசுக்களை முட்டைகளிலேயே பிடித்து சேகரித்து அளிப்பதற்கு இது மிகவும் உதவுகிறது. இதனை 9 வயது சிறுமி கண்டுபிடித்துள்ளார் என்பதுதான் ஆச்சர்யமாக உள்ளது. டெங்கு, சிக்குன் குனியா, ஜிகா வைரஸ் உள்ளிட்ட காய்ச்சலுக்கு முக்கிய காரணியாக இருப்பது கொசு எனும் அரக்கன் தான், அதனை அது வழியிலேயே சென்று பிடித்து அழிப்பதுதான் இச்சிறுமியின் கண்டுபிடிப்பு. கொசுவை அழிக்க பயன்படுத்தப்படும் கொசு அழிப்பான் மருந்துகள் ஆரோக்கியத்திற்கு சீர்கேடுகளை உருவாக்குகின்றன. குறிப்பாக வயதானவர்களுக்கு மூச்சுத்திணறல் போன்ற பாதிப்புகளை ஏற்படுத்திவிடுகின்றன. இதனை தடுக்க ஒரு செலவும் இல்லாமல் கொசுவை தவிர யாருக்கும் பாதிப்பு ஏற்படுத்தாத இந்த கொசுப் பொறியை நாம் வீட்டில் உருவாக்கி பயன்படுத்தலாம்.

Image

டயர் மூலம் வடிவமைக்கப்படும் இந்த சாதனம் ஓவில்லாண்டா என்று அழைக்கப்படுகிறது. சிறு துரும்பும் பல் குத்த உதவும் என்பது போன்று தேவையில்லாத டயர் தான் இந்த சாதனத்திற்கு மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. பாதி டயரை வெட்டி எடுத்துக்கொண்டு அதனுடன் ஒரு பைப்பை இணைத்துவிட வேண்டும். அந்த டயருக்கு நடுவில் ஒரு துளையை போட்டுவிட வேண்டும். டயரின் துளைக்குள் அந்த பைப்பை வைத்து இணைத்துவிட்டு பைப்பின் மறுபுறம் குழாய்போன்ற அமைப்பை ஏற்படுத்த வேண்டும். இந்த டயரை ஒரு கம்பியின் உதவியுடன் சுவற்றில் மாட்டிவிடலாம்.

அதன்பின் அந்த டயரில் சிறிது தண்ணீரை ஊற்ற வேண்டும். டயரின் இரு புறமும் பேப்பரை வைத்துவிட வேண்டும். தண்ணீர் தேங்கியிருப்பதை கண்டு அங்கு கொசுக்கள் படையெடுத்து முட்டையிடுகின்றன. 3 நாட்களுக்கு ஒருமுறை தண்ணீரை குழாய் வழியாக வடிகட்டி எடுத்து அந்த கொசுவின் லார்வாக்களை குளோரின் கரைசல் கொண்டு அழித்துவிடலாம். இதனால் கொசுவின் உற்பத்தி அழிக்கப்படும்.

Image

இந்த ஓவில்லாண்டாவை வீட்டுக்கு வெளியிலுள்ள சுவர்களிலிலோ, தோட்டங்களிலிலோ அல்லது வீடுகளுக்கு உள்ளேயும் வெளியேயும் தொங்கவிடலாம். 3 நாட்களுக்கு ஒருமுறை தண்ணீரை சுத்தம் செய்து புது தண்ணீரை அதில் வைப்பதன் மூலம் கொசு பெருக்கத்தை அழிக்க முடியும். இதுபோன்ற ஓவில்லாண்டா பொறிகள் பொதுவாக மெக்சிகோவிலேயே அதிகம் பயன்படுத்தப்படுகின்றன. ஓவில்லாண்டா என்ற வார்த்தை உண்மையில் இரண்டு சொற்களின் கலவையிலிருந்து வருகிறது, லத்தீன் வார்த்தையான ஓவி என்பதற்கு முட்டை மற்றும் ஸ்பானிஷ் வார்த்தையான லான்டா என்பது பிடிப்பது என்றும் பொருளாகும்.