திண்டுக்கல் மாவட்டத்தில் புதிதாக 9 வாக்குச்சாவடிகள் அமைப்பு – ஆட்சியர் தகவல்

 

திண்டுக்கல் மாவட்டத்தில் புதிதாக 9 வாக்குச்சாவடிகள் அமைப்பு – ஆட்சியர் தகவல்

திண்டுக்கல்

திண்டுக்கல் மாவட்டத்தில் வரும் சட்டமன்ற தேர்தலையொட்டி புதிதாக 9 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட உள்ளதாக, மாவட்ட ஆட்சியர் விஜயலட்சுமி
தெரிவித்துள்ளார். திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், வாக்குச்சாவடி மறுசீரமைப்பு தொடர்பான ஆலோசனை கூட்டம் நேற்று ஆட்சியர் விஜயலட்சுமி தலைமையில் நடைபெற்றது. இதில், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். இந்த கூட்டத்தில் பேசிய ஆட்சியர் விஜயலட்சுமி, திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்ற தொகுதிகளில் தற்போது 2 ஆயிரத்து 94 வாக்குச்சாவடிகள் உள்ளதாகவும், 2021 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு புதிதாக 9 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட உள்ளதாகவும் தெரிவித்தார்.

திண்டுக்கல் மாவட்டத்தில் புதிதாக 9 வாக்குச்சாவடிகள் அமைப்பு – ஆட்சியர் தகவல்

இதனால் மாவட்டத்தில் உள்ள வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 103 ஆக அதிகரிக்கும் என்றும் அவர் கூறினார். இவற்றில் 7 மையங்களில் பாகங்கள் சீரமைக்கப்படவும், 57 மையங்கள் இடமாற்றம் செய்யப்பட உள்ளதாகவும் தெரிவித்த அவர், 4 வாக்குச்சாவடிகளுக்கு பெயர் மாற்றமும், 81 வாக்குச்சாவடிகள் கட்டிட மாற்றமும் செய்யப்படுவதாகவும் கூறினார். இதேபோல், திண்டுக்கல் மாவட்டத்தில் வரும் ஜனவரி ஒன்றாம் தேதியன்று 18 வயது நிறைவு செய்யக்கூடிய அனைவரும், அருகாமையில் உள்ள வாக்குச்சாவடி மையங்களில் உள்ள தலைமையாசிரியர்கள், வட்டாட்சியர் மற்றும் நகராட்சி அலுவலகங்களில் படிவம்-6ல் வயதிற்கான சான்றுகளுடன் விண்ணப்பிக்கலாம் என்றும், அல்லது அரசு இ-சேவை மையங்களில் தேர்தல் ஆணைய இணையதளத்தில் விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்யலாம் என்றும் கூறினார்.

மேலும், வரும் நவம்பர் 16 ஆம் தேதி ஒருங்கிணைந்த வாக்காளர் பட்டியல் வெளியிட உள்ளதாகவும், அதனை தொடர்ந்து வாக்காளர் பட்டியல் சுருக்கத் திருத்தம் செய்யும் பணிகள் நவம்பர் 16 முதல் டிசம்பர் 15ஆம் தேதி வரை நடைபெற்று, இறுதி வாக்காளர் பட்டியல் ஜனவரி மாதம் 20ஆம் தேதி வெளியிடப்படும் என்றும் கூறினார்.