80 சதவிகித மதிப்பெண் உள்ளவர்களுக்கே தகுதிச்சான்று: உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு!

 

80 சதவிகித மதிப்பெண் உள்ளவர்களுக்கே தகுதிச்சான்று: உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு!

வெளிநாட்டு மருத்துவக் கல்லூரிகளில் சேர்வதற்கு, 80 சதவிகித மதிப்பெண் பெற்றவர்களுக்கு மட்டுமே தகுதிச்சான்றிதழ் வழங்க வேண்டும் என இந்திய மருத்துவக் கவுன்சிலுக்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

மதுரை: வெளிநாட்டு மருத்துவக் கல்லூரிகளில் சேர்வதற்கு, 80 சதவிகித மதிப்பெண் பெற்றவர்களுக்கு மட்டுமே தகுதிச்சான்றிதழ் வழங்க வேண்டும் என இந்திய மருத்துவக் கவுன்சிலுக்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

பணம் படைத்தவர்கள் பண பலத்தின் மூலம் குறைந்த மதிப்பெண் பெற்று  வெளிநாடுகளில் மருத்துவம் படிப்பதற்கான தகுதிச்சான்றை பெற்று வருகின்றனர். இதையடுத்து  தமிழகத்தைச் சேர்ந்த தாமரைச்செல்வன் மேற்கிந்திய தீவுகளில் மருத்துவப் படிப்பை முடித்துள்ள நிலையில் தனக்கு  தமிழ்நாடு மருத்துவக் கவுன்சிலில் மருத்துவராகப் பதிவு செய்வதற்கு உத்தரவிடக் கோரி மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கிருபாகரன், அவரது கோரிக்கைளை பரிசீலிக்குமாறு கடந்தாண்டு உத்தரவிட்டிருந்தார்.

இது குறித்து பதிலளித்துள்ள இந்திய மருத்துவக் கவுன்சில், 12-ம் வகுப்பில் இயற்பியல், வேதியியல் மற்றும் உயிரியல் பாடங்களை படித்து குறைந்தபட்சம் 50 விழுக்காடு மதிப்பெண் பெற்றவர்களுக்கு தகுதிச்சான்றிதழ் வழங்கப்படுவதாகக் கூறியுள்ளது. இதையடுத்து, இந்தியாவில் 90 விழுக்காடு மதிப்பெண் பெற்ற மாணவர்களே மருத்துவப் படிப்பில் சேர முடியாத நிலை உள்ள போது, வெளிநாட்டு மருத்துவக் கல்லூரிகளில் சேர 80 விழுக்காட்டிற்கும் குறைவான மதிப்பெண் பெற்றவர்களுக்கு தகுதிச்சான்றிதழ் வழங்கக்கூடாது என்று இந்திய மருத்துவக் கவுன்சிலுக்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.