8 மாதங்களுக்கு பிறகு சந்தோஷத்தில் மிதந்த மாருதி சுசுகி நிறுவனம்…..

 

8 மாதங்களுக்கு பிறகு சந்தோஷத்தில் மிதந்த மாருதி சுசுகி நிறுவனம்…..

பண்டிகை காலத்தில் விற்பனை நன்றாக இருந்ததால், 8 மாதங்களுக்கு பிறகு முதல் முறையாக கடந்த நவம்பரில் கார் தயாரிப்பை மாருதி சுசுகி இந்தியா நிறுவனம் அதிகரித்துள்ளது.

பொருளாதார மந்தநிலை, மக்கள் செலவினங்களை பார்த்து பார்த்து மேற்கொண்டு வருவது போன்ற பல்வேறு காரணங்களால் நம் நாட்டில் வாகன விற்பனை இந்த ஆண்டு தொடக்கம் முதல் மந்தகதியில் இருந்து வந்தது. விற்பனை குறைந்ததால் நிறுவனங்களிடம் கையிருப்பு அதிகரிக்க தொடங்கியது. இதனையடுத்து நிறுவனங்கள் உற்பத்தியை குறைக்க தொடங்கின. 

மாருதி கார் மாடல்

இருப்பினும் விற்பனை நிலவரம் தொடர்ந்து மந்தமாக இருந்ததால் கையிருப்பு அதிகரித்தது, இதனால் மாருதி சுசுகி, அசோக் லேலண்ட் உள்பட வாகன தயாரிப்பு நிறுவனங்கள் வேறு வழியில்லாமல் மாதத்தில் பல நாட்கள் வேலையில்லா நாட்களை அறிவித்தன. இந்நிலையில் பண்டிகை காலத்தில் வாகன விற்பனை சிறிது சூடு பிடித்தது. இதனால் வாகன தயாரிப்பு நிறுவனங்கள் சிறிது சந்தோஷம் அடைந்தன.

மாருதி கார் தயாரிப்பு ஆலை

பண்டிகை காலத்தில் விற்பனை அதிகரித்ததால், மாருதி சுசுகி இந்தியா நிறுவனம் 8 மாதங்களுக்கு பிறகு முதல் முறைாயக கடந்த நவம்பரில் கார் தயாரிப்பை அதிகரித்தது. அந்த மாதத்தில் மாருதி சுசுகி நிறுவனம் மொத்தம் 1.41 லட்சம் கார்களை தயாரித்துள்ளது. இது 2018 நவம்பர் மாதத்தை காட்டிலும் (1.35 லட்சம் கார்கள்) 4.33 சதவீதம் அதிகமாகும்.  நாட்டின் மிகப்பெரிய கார் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுசுகி இந்தியா நிறுவனம் கடந்த அக்டோபரில் உற்பத்தியை சுமார் 21 சதவீதம் குறைத்து 1.19 லட்சம் கார்களை மட்டுமே தயாரித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.