8 பேரை காவு வாங்கி கஜா கோரதாண்டனம்; தஞ்சையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உயிரிழப்பு

 

8 பேரை காவு வாங்கி கஜா கோரதாண்டனம்; தஞ்சையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உயிரிழப்பு

கஜா புயலின் காரணமாக மாநிலத்தின் பல்வேறு இடங்களில் இதுவரை 8 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன

தஞ்சாவூர்: கஜா புயலின் காரணமாக மாநிலத்தின் பல்வேறு இடங்களில் இதுவரை 8 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கஜா புயல் இன்று அதிகாலை 3.30 மணியளவில் நாகை – வேதாரண்யம் அருகே கரையை கடந்தது. அப்போது, மணிக்கு 100 முதல் 110 கி.மீ வரையி வேகத்தில் காற்று வீசியது. பலத்த காற்று காரணமாக பல்வேறு இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்தன. தட்டிகள், பேனர்கள், மின் கம்பங்கள் உள்ளிட்டவை காற்றில் சேதம் அடைந்தன. மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்துள்ளது.

ஒரு சில இடங்களை தவிர பெரும்பாலான இடங்களில் மின்சாரம் விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளது. சாலையில் முறிந்து விழுந்த மரங்களை அகற்றும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். கடலூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர் உள்ளிட்ட பகுதிகள் பெரும் பாதிப்புக்கு உள்ளானது.

இந்நிலையில், கஜா புயலின் கோரதாண்டவத்தால் இதுவரை 8 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே சிவகொல்லையில் வீட்டின் சுவர் இடிந்து விழுந்து ரமேஷ், சதீஷ், அய்யாதுரை, தினேஷ்  ஆகிய 4 பேர் உயிரிழந்துள்ளனர். அதேபோல், கடலூர் மாவட்டத்தில் மரக்கிளை முறிந்து விழுந்ததில், மின்வயர் அறுந்து விழுந்து மின்சாரம் தாக்கி ஆனந்தன் உள்பட இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர்.

விருத்தாச்சலம் அருகே மழை காரணமாக சுவர் இடிந்து விழுந்ததில் மனைவி அய்யம்மாள் (45) உயிரிழந்துள்ளார். கணவர் ராமச்சந்திரன் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். திருவண்ணாமலை மாவட்டம் செய்யார் வடமணப்பாக்கத்தில் வீட்டின் சுவர் இடிந்து விழுந்து சிறுமி பிரியாமணி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மேலும் 4 பேர் படுகாயங்களுடன் செய்யார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.