75 வயதில் முதல் குழந்தைக்கு தாயான பெண்: 600 கிராம் எடையில் பிறந்த பெண் குழந்தை

 

75 வயதில் முதல் குழந்தைக்கு தாயான பெண்: 600 கிராம் எடையில் பிறந்த பெண் குழந்தை

ராஜஸ்தான் மாநிலத்தில் 75 வயது பெண் ஒருவர் நேற்று முன்தினம் இரவு பெண் குழந்தையை பெற்றெடுத்தார். 600 கிராம் எடையில் பிறந்த அந்த குழந்தையை மருத்துவர்கள் தீவிர கண்காணித்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.

ராஜஸ்தான் மாநிலம் கோட்டா பகுதியை சேர்ந்த விவசாய குடும்ப பின்னணியை சேர்ந்தவர் 75 வயதான மங்களம் (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவருக்கு நீண்ட காலமாக குழந்தை இல்லை. இதனையடுத்து ஒரு குழந்தையை தத்தெடுத்து வளர்த்து வருகிறார். இருப்பினும் தனக்கு சொந்தமான குழந்தை வேண்டும் என விரும்பினார். இதனையடுத்து அந்த பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் தனக்கு குழந்தை பிறப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து மருத்துவர்களிடம் ஆலோசனை செய்தார்.

குழந்தை

இதனையடுத்து மருத்துவர்களின் ஆலோசனைபடி ஐ.வி.எப். முறையை பரிசோதனை செய்ய முடிவு செய்தார். இதனையடுத்து 75 வயதான மங்களம் கர்ப்பமானாள். இந்நிலையில் கர்ப்பமான 6.5 மாதத்திலேயே மங்களம் குழந்தையை பெற்றெடுத்தாள். 600 கிராம் எடையில் பிறந்த பெண் குழந்தையை ஐ.சி.யூ.வில் வைத்து குழந்தைகள் நல மருத்துவர்கள் கண்காணித்து வருகின்றனர்.

குழந்தை (கோப்பு படம்)

இது குறித்து தனியார் மருத்துவமனையின் மருத்துவர் அபிலாஷா கிங்கர் கூறுகையில், மருத்துவ ரீதியாகவும், உடல் ரீதியாகவும் பலவீனமாகவும் இருந்த தாயின் வயது காரணமாக முன்கூட்டியே 6.5 மாதத்தில் குழந்தையை பிரசவிக்க வேண்டியது இருந்தது. மேலும் அந்த பெண்ணுக்கு ஒரு நுரையீரல் மட்டுமே இருந்தது. இது எங்களது மருத்துவ குழுவுக்கு சவாலாக இருந்தது என தெரிவித்தார்.